ஒரு கையில் ‘கபசுர குடிநீர்’.. மறு கையில் ‘மதுபாட்டிலா?’ தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஒரு கையில் கபசுர குடிநீர், மறு கையில் மது வைத்திருப்பது முரண்பாடாக உள்ளதே? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி பற்றாக்குறை இருப்பதாகவும், அதனால் மதுக்கடைகளை திறக்க வேண்டும் என பிரதமருடன் நடந்த வீடியோ கான்ஃபிரன்ஸ் கூட்டத்தில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து சில கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

அந்த வகையில் தமிழகத்தில் சென்னை நீங்களாக மற்ற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதற்கு பல்வேறு தரப்புகளிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை அடுத்து ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த நிலையில் மதுரை பழைய குயவர்பாளையத்தை சேர்ந்த பொனிபாஸ் என்பவர் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீது இன்று நடந்த விசாரணை நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில், சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்துள்ளது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு மனுதாரர் தரப்பில், உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கில் வைக்கப்பட்ட கோரிக்கையும், இந்த வழக்கில் வைக்கப்பட்ட கோரிக்கையும் ஒன்றாக இருப்பினும் அதற்கான காரணங்கள் வேறாக இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டதற்கான காரணம் என்னவெனில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதில் உள்ள சிக்கலை குறிப்பிட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒரு கையில் கபசுர குடிநீர், மறு கையில் மதுவை வைத்திருக்கிறது தமிழக அரசு. தழிழக அரசின் செயல் முரண்பாடாக உள்ளதே என கருத்து தெரிவித்தனர். இதனை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்