'சென்னையில் இவருக்கு தெரியாத ஒரு தெரு கூட கிடையாது'... 'இக்கட்டான சூழ்நிலையில் வந்த பெரிய பொறுப்பு'... எதிர்பார்ப்பில் மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரான மா.சுப்ரமணியன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர்.

தமிழகச் சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து நாளை முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். கொரோனா தொற்று காரணமாகப் பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெற உள்ளது. மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள். சுகாதாரத்துறை அமைச்சராக மா.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுநோய் வேகமாகப் பரவி வரும் நெருக்கடியான இந்த காலகட்டத்தில், மா.சுப்பிரமணியனுக்கு முக்கியமான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மா.சுப்பிரமணியன், சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தனது உயர் கல்வியை நிறைவு செய்தார். பின்னர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பையும் பெங்களூர் ஹெவனூர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் (எல்.எல்.பி) முடித்தார்.

1976 ஆம் ஆண்டு திமுகவில் சேர்ந்த மா.சுப்பிரமணியன் 1996-2006 காலகட்டத்தில் சென்னை மாநகராட்சி அவைத்தலைவராக இருந்தார். திமுக இளைஞர் அணியின் துணை பொதுச் செயலாளராக இருக்கும் இவர், கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான தலைவர் ஆவார். விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்ட சுப்பிரமணியன் 2006-2011 காலகட்டத்தில் சென்னை மாநகர மேயராக பணியாற்றியுள்ளார்.

இவர் சென்னை மாநகர மேயராக இருந்த காலகட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளைச் செய்தார். அவரது பணி பலராலும் பாராட்டப்பட்டது. சென்னை மாநகர பகுதிகளில் ஒரு சிறிய தெருவில் ஒரு பிரச்சனை என்றாலும் அது சுப்பிரமணியனுக்குத் தெரியாமல் இருக்காது. அந்த அளவிற்குச் சென்னை மாநகரம் சுப்பிரமணியனுக்கு அத்துப்படி. 2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தலின்போது சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரண்டாவது முறையாக சைதாப்பேட்டை தொகுதி மக்கள், மா.சுப்பிரமணியனைத் தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சராக நாளை பதவியேற்க உள்ள மா.சுப்பிரமணியனுக்கு மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன் ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தற்போதைய பேரிடர் காலகட்டத்தில் மா.சுப்பிரமணியனுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பொறுப்பு மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்