‘இப்படியொரு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கவே இல்ல’!.. வைரலாகும் காதல் ஜோடியின் நிச்சயதார்த்த மோதிரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காதல் ஜோடியின் நிச்சயதார்த்த மோதிரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோயம்புத்தூரைச் சேர்ந்த கனிமொழி மனோகரன், சென்னையைச் சேர்ந்த அரவிந்த்ராஜ் ஆகிய இருவரும் பேஸ்புக் மூலம் பழகி காதலர்கள் ஆகியுள்ளனர். இந்த நிலையில் இவர்களது நிச்சயதார்த்ததின் போது இருவரும் திருக்குறள் பதித்த மோதிரம் அணிந்திருந்தது இணையத்தில் வைரலானது. இதனை கனிமொழி டுவிட்டர் பதிவிட்ட சிலமணி நேரத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து, பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து தெரிவித்த கனிமொழி, ‘விவரம் தெரிந்த காலத்தில் இருந்தே எனக்கு பெரியாரின் கருத்து மீது அதிக ஈர்ப்பு இருந்தது. பேஸ்புக்கில் அறிமுகமான எனது காதலர் அரவிந்த் ராஜ்ஜூக்கும் அதே நிலைப்பாடு இருந்தது. அதுதான் நாங்கள் அறிமுகமாவதற்கு காரணம். ஒரு வருடமாக பழகி வந்த நாங்கள், திருமணம் செய்ய முடிவெடுத்தோம். எங்களது திருமணம் சாதிமறுப்பு திருமணம்தான்.

மோதிரத்தில் திருக்குறளை பதிவு செய்ததற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று தற்போதைய அரசியல் சூழல். இன்னொன்று, எனது தோழி ஒருவர் அவரது திருமணத்தின் போது தாலியில் திருக்குறளை பதித்திருந்தார். அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

அதேபோல் நாங்களும் ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அத்துடன் அது “பிறப்பால் அனைவரும் சமம்” என்ற கருத்தையும் ஆழமாக உணர்த்த வேண்டும் என்று விரும்பினோம். அதன் விளைவுதான் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற திருக்குறளை நிச்சயதார்த்த மோதிரத்தில் பதிவு செய்ததிற்கான காரணம்.

இதற்காக முதலில் பெரிய தங்கநகைகடைகளுக்கெல்லாம் ஏறி இறங்கினோம். அவர்கள் இதற்கு அதிக காலம் பிடிக்கும், செய்வது கடினம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடுக்கினர். அதன்பின்னர் கோவை அருகே நகை செய்து விற்கும் ஒரு வியாபாரியிடம் சென்று இது குறித்து கூறினோம்.

அதற்காக நானே வடிவமைத்த டிசைனை அவரிடம் கொடுத்தேன். அவர், மோதிரத்தை தயார் செய்து, அதில் லேசர் மூலம் நான் கொடுத்த டிசைனை வடிவமைத்து தந்தார். இறுதியில் அதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் மோதிரம் மிகவும் பிடித்திருந்தது.

உடனே மோதிரத்தை போட்டோ எடுத்து டுவிட்டரில் பகிர்ந்தேன். அதற்கு கிடைத்த வரவேற்பும் வாழ்த்துக்களும் எங்களது குடும்பத்தை ஆச்சரியப்பட வைத்தது. உண்மையில் நான் இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தாலி சடங்கை தவிர்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எங்கள் இருவருக்கும் இருக்கிறது’ என கனிமொழி கூறியுள்ளார்.

News Credits: Puthiyathalaimurai

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்