'ஊரடங்கால் சிக்கித் தவிக்கும்'... 'வெளிமாநில தொழிலாளர்களுக்காக'... 'மத்திய அரசின் புதிய திட்டம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஊரடங்கு நீட்டிப்பினால் சிக்கித் தவித்துவரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தற்காலிக நிவாரணமாக அவர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு அருகிலேயே வேலை வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவினால் பல வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நடைப்பயணமாக கிளம்பினர். ஆனால் சுமார் 14.3 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் மக்கள், அரசு முகாம்களில் தஞ்சமடைந்தாலும் அவர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். இந்நிலையில், நாளை முதல் சில வேலைகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

இதையடுத்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பின்னரான திருத்தப்பட்ட வழிமுறைகளில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை சுட்டிக்காட்டி, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தொழில்துறை, உற்பத்தித்துறை, விவசாயம், கட்டுமானம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் உள்ளிட்ட பணிகளில் மாநில அரசுகள் ஈடுபடுத்திக் கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

அத்துடன், இதற்கான வழிமுறைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. அதன்படி, தற்போது நிவாரண முகாம்களில் இருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பதிவு செய்யவேண்டும். பல்வேறு பணிகளில் அமர்த்தப்படுவதன் பொருட்டு, அவர்கள் தகுதியானவர்களா என்பது பற்றிய அவர்களது திறன்கள் சோதிக்கப்பட வேண்டும்.

முகாம்களில் இருப்பவர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்துக்கு செல்ல விரும்பும் பட்சத்தில் அவர்கள் முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களை வேறு மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லக் கூடாது. தற்போது அவர்கள் இருக்கும் மாநிலத்திலேயே இருக்க வேண்டும்.

பயணங்களின் போது வாகனங்களில் சரீர விலகல் கடைபிடிக்கப்படுவதையும், சுகாதாரத்துறை வழிகாட்டுதலின் படி, கிருமி நாசம் செய்யப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். பயணத்தின் போது தேவையான உணவு, குடிநீர் போன்றவற்றை உள்ளூர் நிர்வாகமே செய்து தரவேண்டும். ஏப்ரல் 15 ஆம் தேதி வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வழிமுறைகளை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்