'7 மாசம் ஆச்சு'... 'பிறந்த குழந்தையை பாக்க முடியலியே'... 'பரிதவித்த வங்கி மேலாளர்'... நெகிழ வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்தவர் நவீன். இவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஒரு அரசு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி ஸ்ரவந்தி என்ற மனைவியும், பார்கவ் என்ற 3 வயதில் மகனும் உள்ளார். நவீன் சென்னிமலையில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கி இருந்தார்.

இதனிடையே ஸ்ரவந்தி மீண்டும் கர்ப்பம் அடைந்த நிலையில் பிரசவத்துக்காகக் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆந்திர மாநிலத்தில் உள்ள தனது அம்மா வீட்டிற்குச் சென்றார். வங்கி மேலாளர் நவீன் மட்டும் சென்னிமலையில் தனியாகத் தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஸ்ரவந்திக்கு பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை பிறந்த ஆனந்தத்தில் நவீன் இருந்த நிலையில், அந்த நேரத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அந்த சூழ்நிலையில் மாவட்டத்தை விட்டே வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் நவீனும் தனது ஆசை மகளைப் பார்க்க முடியாமல் தவித்து வந்தார். தினமும் வீடியோ கால் மூலமாகக் குழந்தையை அவர் பார்த்து வந்த நிலையில், தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டதாலும், வங்கியில் விடுப்பு கிடைத்ததாலும் ஆந்திராவுக்குச் செல்ல விரும்பினார். இதைத்தொடர்ந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள தன்னுடைய சொந்த ஊருக்குச் சென்றார்.

அங்குச் சென்றதும் தனது ஆசை மகளைக் கொஞ்சி மகிழ்ந்த நவீன், 7 மாதங்களுக்குப் பிறகு தன்னுடைய மகளைப் பார்த்ததால் நவீன் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். பிறந்து 7 மாதங்களுக்குப் பிறகு மகளைப் பார்த்து தந்தை ஆனந்தக் கண்ணீர் வடித்தது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்