சத்தியமா எனக்குத் தான் ஓட்டு போட்டியா?...பணத்தை திருப்பிக் கேட்டு ருத்ரதாண்டவம் ஆடிய வேட்பாளர்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று பணத்தை திருப்பி கேட்டு ரகளையில் ஈடுபட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் யூனியனுக்கு உட்பட்ட புளியம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு, பூசை என்பவர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் விரக்தியில் இருந்த அவர் நேற்று ஊரில் உள்ள மார்க்கெட் பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு ஒவ்வொருவரையும் தடுத்து நிறுத்தி "ஓட்டுக்கு பணம் வாங்குனீங்க தானே, ஏன் ஓட்டு போடவில்லை" என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் தாங்கள் ஓட்டு போட்டதாக சத்தியம் செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பூசை, "நீங்கள் எல்லோரும் ஓட்டு போட்டிருந்தால் நான் எப்படி தோற்பேன்?" "ஒழுங்கு மரியாதையாக வாங்கிய பணத்தை திருப்பி தந்து விடுங்கள்" என்று ஆவேசமாக கத்தினார். அதோடு கற்களை வீடுகளின் மீது வீசியெறிந்து ரகளையில் ஈடுபட்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதேபோல் கலசபாக்கம் யூனியனுக்கு உட்பட்ட அனியாலை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றவர்களில ஒருவரான சேட்டு என்பவரும் வீடு வீடாகச் சென்று பணத்தை திருப்பிக் கேட்டு சண்டையிட்டு வருகிறார். இன்னொருவர் தான் கொடுத்த பணம் மற்றும் மூக்குத்தி பரிசை வைத்துக் கொள்ளும் படியும், அடுத்து வரும் தேர்தலில் தவறாமல் வாக்களியுங்கள் என்றும் நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்ற ஒன்று இருந்ததையும், அதில் வாக்குக்கு பணம் கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என குறிப்பிடப்பட்டிருப்பதையும் மறந்து விட்டு, திருவண்ணாமலையில் உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் அடிக்கும் கூத்து தேர்தல் அதிகாரிகளின் பார்வைக்கு சென்றிருக்குமா? என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
மற்ற செய்திகள்