'நாங்க தோப்புல களை எடுத்துட்டு இருந்தோம்'... 'அப்போ தான் அந்த சத்தம் கேட்டுச்சு'... பயத்தில் உறைந்துபோன தொழிலாளர்கள் சொன்ன தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சமீபகாலமாக வனவிலங்குகள் ஊருக்குள் வருவது என்பது தொடர்கதையான ஒன்றாக மாறியுள்ளது. அப்படி ஒரு சம்பவம் தான் வாணியம்பாடியில் நடந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சென்னாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தென்னை வியாபாரி ஜெயராமன். இவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு மாதகடப்பா வனப் பகுதியையொட்டி உள்ளது. இங்கு மல்லிகா என்பவர் காவல் பணியில் இருப்பது வழக்கம்.    இந்நிலையில் நேற்று பிற்பகல்1 மணியளவில் தென்னந்தோப்பில் வேலையாட்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது மல்லிகா அதனை மேற்பார்வை செய்து கொண்டு இருந்துள்ளார்.

அந்த நேரம் ஏதோ ஒரு உறுமல் சத்தம் பயங்கரமாகக் கேட்டுள்ளது. இதனை வேலையை நிறுத்திய கூலித்தொழிலாளிகள் என்ன சத்தம் என யூகிப்பதற்குள் சிறுத்தை ஒன்று அங்கிருந்த நாய்களைத் துரத்திக் கொண்டு வந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ந்துபோன கூலித்தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடிப் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றனர்.

இதற்கிடையே நாய்களை விரட்டி வந்த சிறுத்தை அங்குள்ள வனப்பகுதிக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது. உடனே அங்கிருந்த பொதுமக்கள், திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், திருப்பத்தூர் மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் ராஜ்குமார் தலைமையில், திருப்பத்தூர் வனச்சரகர் பிரபு மற்றும் 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சென்னாம் பேட்டை பகுதிக்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, கடந்த சில நாட்களாக இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், இன்று (நேற்று) சிறுத்தை ஒன்று நாய்களை விரட்டியபடி தென்னந்தோப்பு வழியாக ஓடி வருவதைத் தொழிலாளர்கள் பார்த்தாக கூறிய கிராம மக்கள் மற்றும் கால்நடைகளுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து தென்னந்தோப்பு பகுதிக்குச் சென்ற வனத்துறையினர், அங்குச் சிறுத்தை சென்றதின் கால்தடம் பதிவானதாகப் பொதுமக்கள் கூறிய இடத்தை ஆய்வு செய்தனர். பிறகு, தென்னந்தோப்பு மற்றும் வனப்பகுதியையொட்டி யுள்ள விவசாய நிலம் அருகே 3 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வனவிலங்குகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க வனத்துறையினருக்கு மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் ராஜ்குமார் உத்தரவிட்டார்.

மேலும் வனப்பகுதியையொட்டி வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் என்றும், கால்நடைகளைப் பாதுகாப்புடன் கண்காணிக்க வேண்டும் வனத்துறை சார்பில் நேற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்