“சென்னையில் OLX, நோ புரோக்கர்-ல வீடு பாக்குறவங்க உஷார்!”.. வாடகை, லீஸுக்கு வீடு தேடுபவர்களை குறிவைத்து மோசடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் நபர்களின் வீடுகளை வாடகை மற்றும் லீசு என பொய் கூறி, வாடகைதாரர்களை மோசடிக்குள்ளாக்கும் கும்பல் சென்னையில் சிக்கியுள்ளது.

சென்னையில் கொரோனாவுக்கு பின்னர் வீடுகள் நிறையவே காலி செய்யப்பட்டன. இந்த வீடுகளில் வாடகை மற்றும் லீசுக்காக உள்ள வீடுகளை, குறிப்பாக உரிமையாளர்கள் வெளியூர் அல்லது வெளிநாடுகளில் உள்ள வீடுகள் குத்தகைக்கு இருப்பதாக OLX மற்றும் 99acres.com, NO Broker போன்ற தளங்களிலும், சமூக வலைதளங்களிலும் இந்த கும்பல், புகைப்படத்துடன் விளம்பரங்களை விட்டுள்ளது. அவற்றை பார்த்துவிட்டு வரும் வாடகைதாரர்களை நேரில் அழைத்துச்சென்று வீட்டை காண்பித்துவிட்டு  வீட்டின் வசதியைப் பொருத்து 4 முதல் 12 லட்சம் ரூபாய் வரை ஒப்பந்த பத்திரத்தை தயார் செய்து, ஒப்பந்த பணத்தை பெற்றுக்கொண்டு இந்த கும்பல் தொடர் மோசடிகளை செய்துவந்துள்ளது.

அதன்பின்னர், ஓரிரு மாதங்களுக்குப் பிறகு உண்மையான வீட்டு உரிமையாளரை சந்திக்கும்போது தான், வாடகைதாரர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதையே அறிந்துள்ளனர். இதுபோன்ற மோசடி நடைபெற்றதில், பணத்தை இழந்த 98 பேர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுபற்றிய விசாரணையில், சன்ஷைன் பிராபர்ட்டி டெவலப்பர் என்கிற பெயரில் கிழக்கு தாம்பரத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்த பிரகாஷ், காயத்ரி, விக்னேஷ் என மூன்று பேர் கொண்ட கும்பல், மடிப்பாக்கம், சேலையூர், நன்மங்கலம், பம்மல் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து இவர்கள் 3 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

குத்தகைக்கு கேட்போரிடம் இருந்து பணம் வந்தவுடன் செல்போன் எண்ணை மாற்றி விட்டு மீண்டும் மோசடியை தொடர்ந்த இந்த கும்பல் 3 ஆண்டுகளாக மோசடியில் ஈடுபட்டதன் மூலம் சம்பாதித்த 2 கோடி ரூபாய் பணத்தை வைத்து சினிமா மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ததும் தெரிய வந்துள்ளது. இதில் பிரகாஷ் என்பவர் வெள்ளை புறா, மஞ்ச குருவி ஆகிய படங்களின் இணை தயாரிப்பாளராக இருந்துள்ளார். எனவே குத்தகை அல்லது வாடகைக்கு வீடுகளைத் தேடுபவர்கள், இதுபோன்று விளம்பரம் செய்யும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை பரிசோதிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்