‘அழைப்பிதழ்’ கொடுக்க வந்த 2 பேர்... டிவி ‘சத்தத்தை’ அதிகப்படுத்திவிட்டு... ‘அடுத்தடுத்து’ நுழைந்த ‘மர்ம’ நபர்கள் செய்த ‘கொடூரம்’...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கும்பகோணத்தில் அழைப்பிதழ் கொடுக்க வேண்டுமென வந்த மர்ம கும்பல் ஒன்று வீட்டிலிருந்த ஒருவரைக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் மேலகாவிரியைச் சேர்ந்த தம்பதி ராமநாதன் (63) - விஜயா. எண்ணெய் வியாபாரியான ராமநாதனின் மகள் சரண்யா மற்றும் அவருடைய கணவர் கோவிந்தராஜன் இருவரும் இவர்களுடனேயே வசித்து வருகின்றனர். இந்நிலையில் சரண்யாவும் அவருடைய கணவரும் நேற்று உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வெளியே சென்றுள்ளனர். இதையடுத்து இரவு வீட்டில் ராமநாதனும், விஜயாவும் மட்டும் தனியாக இருந்தபோது 2 மர்ம நபர்கள் அழைப்பிதழ் கொடுக்க வந்திருப்பதாகக் கூறி வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். உடனே விஜயா டிவி சத்தத்தைக் குறைக்க, அவரிடமிருந்து ரிமோட்டை வாங்கிய மர்ம நபர்கள் டிவி சத்தத்தை அதிகப்படுத்தியுள்ளனர்.

அதன்பிறகு மேலும் 3 பேர் வீட்டுக்குள் நுழைய, அதிர்ச்சியடைந்த ராமநாதன் யார் நீங்கள் என்ன வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த கும்பல்  ராமநாதனைக் கடுமையாகத் தாக்கி, வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் உன்னுடைய மனைவியைக் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர். பிறகு விஜயாவை மற்றொரு அறையில் அடைத்து வைத்துள்ளனர். அவர்களிடம் மனைவியை எதுவும் செய்ய வேண்டாம் எனக் கெஞ்சிய ராமநாதன் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்து வந்து மர்ம நபர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால் நகை, பணத்தை வாங்கிக்கொண்ட அவர்கள் மறைத்து வைத்திருந்த கூர்மையான இரும்புக் கம்பியால் ராமநாதனின் கழுத்தில் குத்தியுள்ளனர்.

கணவர் அலறும் சத்தத்தைக் கேட்டு கதறிய விஜயா திடீரென சத்தம் எதுவும் இல்லாமல் போக பயத்தில் கத்தியிருக்கிறார். அந்த சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் இருந்த ராமநாதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அறையில் அடைக்கப்பட்டிருந்த விஜயாவை மீட்டுள்ளனர். வெளியே வந்த விஜயா தனது கணவர் சடலமாகக் கிடந்ததைக் கண்டு கதறி அழுதுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்துள்ளனர். இதற்கிடையே ராமநாதன் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கும்பகோணம் நகர வர்த்தகர் கழகம், அனைத்து வணிகர் சங்கக் கூட்டமைப்பு சார்பில்  இன்று 300க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்துப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

CRIME, MURDER, ROBBERY, POLICE, KUMBAKONAM, HUSBAND, WIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்