‘இந்த டோக்கனுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல’!.. திரைப்பட பாணியில் நடந்த ‘தில்லாலங்கடி’ வேலை.. அதிர்ந்துபோன மளிகைக் கடைக்காரர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மளிகைக் கடை பெயரில் ரூ.2000 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் வாங்க டோக்கன் கொடுத்து ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனாலும் ஒரு சில இடங்களில் பணத்துக்கு பதிலாக டோக்கன் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

அந்த வகையில், கும்பகோணம் பெரிய கடைத்தெரு பாட்ராச்சாரியார் தெருவில் பிரியம் மளிகை ஏஜென்சி என்ற கடை உள்ளது. பொதுமக்கள் சிலர் அந்தக் கடையின் பெயர் பொறித்து ரூ.2000 என குறிப்பிடப்பட்டிருந்த டோக்கனை கொண்டு வந்து கொடுத்து, அரசியல் கட்சியினர் பணத்திற்கு பதிலாக தங்கள் கடையில் இலவசமாக மளிகை பொருட்கள் வாங்கிக்கொள்ள இந்த டோக்கன் கொடுத்ததாக  கூறியுள்ளனர்.

டோக்கனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் சேக் முகமது, நான் டோக்கனுக்கு மளிகை பொருட்கள் வழங்குவதாக யாருக்கும் உத்தரவாதம் அளிக்கவில்லை, தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறியுள்ளார். அப்போதுதான் பொதுமக்களுக்கு இது போலி டோக்கன் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் தொடர்ந்து கூட்டம் அதிகரிக்கவே அவர் மளிகை கடையை பூட்டிவிட்டு, ‘வேட்பாளர்கள் கொடுத்த டோக்கனுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த டோக்கனுக்கு எங்கள் கடை எந்த பொறுப்பும் ஏற்காது’ என கடையின் கதவில் ஒட்டி சென்றுவிட்டார்.

இதுகுறித்து கூறிய மளிகைக்கடை உரிமையாளர் சேக் முகமது, ‘நான் கடந்த 25 வருடமாக இங்கு கடை நடத்தி வருகிறேன். ஆனால் யாரோ ஒருவர் வாக்காளர்களுக்கு டோக்கனை கொடுத்து உள்ளார். அந்த டோக்கனை எனது கடைக்கு கொண்டு வந்து பொருட்களை கேட்டனர். அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை கூறிவிட்டு, நான் கடையை பூட்டிவிட்டு அறிவிப்பு ஒன்றையும் ஒட்டிவிட்டேன்’ என கூறினார். போலி டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் வெளியான ‘சதுரங்கவேட்டை’ படத்திலும் இதுபோல் போலியான டோக்கனை கொடுத்து மக்களை ஏமாற்றுவது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்