பிறந்து 7 நாட்களேயான ஆண் குழந்தை கடத்தல்.. 10 மணிநேரத்தில் குழந்தை மீட்பு.. காவல்துறைக்கு பாராட்டு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிறந்து 7 நாட்களே ஆன ஆண் குழந்தை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள நரிக்கல்பதி கிராமத்தை சேர்ந்த தம்பதி பாலன் மற்றும் தேவி. இவர்களுக்கு ஏற்கனவே 2 மகன்கள் உள்ள நிலையில், தேவி 3-வது முறையாக கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், கடந்த 29-ந் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு சுகப்பிரசவரத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்குப் பின் தேவிக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடந்தது.

இதனால் மருத்துவமனையில் தங்கியிருந்த தேவியிடம், 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த 1-ந் தேதி முதல் பழகி வந்தார். குழந்தையுடன் தனியாக சிரமப்பட்டு வந்த தேவிக்கு, இரவு நேரத்தில் அந்த பெண் உதவியாக இருந்தார். இதனால் அவர் மீது தேவிக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்து தேவி நேற்று மதியம் குழந்தையுடன் வீட்டுக்கு புறப்பட தயாரானார். இதையடுத்து தேவி, அவரது கணவர் பாலன் ஆகியோருடன் அந்த பெண், குழந்தையை தூக்கிக்கொண்டு பிரசவ வார்டில் இருந்து வெளியே வந்தார்.

அப்போது திடீரென அந்த பெண், குழந்தைக்கு காலில் கொப்பளம் இருப்பதாகவும், எனவே தோல் டாக்டரிடம் காண்பித்து வருகிறேன் என்றும் கூறி குழந்தையுடன் டாக்டர் அறையை நோக்கி சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் குழந்தையுடன் அந்தப் பெண் வரவில்லை. இதனால் பதறிப்போன தம்பதியினர் மருத்துவமனை முழுவதும் அந்தப் பெண்ணை தேடினார்கள். ஆனால் அந்த பெண் எங்கும் இல்லை. அப்போதுதான் அந்த பெண், குழந்தையை கடத்திச்சென்றதை அவர்கள் உணர்ந்தனர். இதனால் தம்பதி இருவரும் கதறினர்.

இது குறித்த தகவலின் பேரில் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் மருத்துவமனையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த பெண், மருத்துவமனையில் இருந்து குழந்தையுடன் ஆட்டோ பிடித்து சென்றது பதிவாகி இருந்தது. எனவே அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையுடன் சென்ற பெண்ணை, பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து கடத்தப்பட்ட குழந்தையை தேடி வந்தனர். இந்நிலையில் குழந்தையை கடத்திச் சென்றவர் உடுமலையைச் சேர்ந்த மாரியம்மாள் என்பதை கண்டுபிடித்தனர். குழந்தை கடத்தப்பட்ட 10 மணிநேரத்தில் குழந்தை மீட்கப்பட்டதை அடுத்து மாரியம்மாள் கைது செய்யப்பட்டுள்ளார். குறை பிரசவத்தில் பிறந்த தனது குழந்தை உயிரிழந்ததை, உறவினர்களிடம் சொல்ல அச்சப்பட்ட மாரியம்மாள், பாலன் தேவி தம்பதியரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் குழந்தை கடத்தப்பட்டதற்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். குழந்தையை மீட்டு வந்த காவல்துறையினர் குழந்தையை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். குழந்தை கடத்தப்பட்டு 10 மணிநேரத்தில் துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்ட காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

INFANT, POLLACHI, GOVERNMENTHOSPITAL, KIDNAPPED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்