கேரள அமைச்சரவை வரலாற்றில் இதுதான் முதல்முறை.. யார் இந்த வீணா ஜார்ஜ்..? வெளியான சுவாரஸ்ய பின்னணி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கேரள அமைச்சரவை வரலாற்றில் முதல்முறையாக பெண் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு இடம் கிடைத்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த கேரள சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 இடங்களை இந்த கூட்டணி கைப்பற்றியது. இதனால் மீண்டும் பினராயி விஜயன் கேரள முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். நாளை (20.05.2021) முதல்வராக அவர் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருடன் 21 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

புதிதாக அமைய உள்ள அமைச்சரவையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா டீச்சரின் பெயர் இடம்பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவையில் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதனடிப்படையில், பினராயி விஜயனை தவிர மற்ற அனைவரும் புதியவர்களாக நியமிக்கபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் கேரள அமைச்சரவையில் முதல் முறையாக பெண் ஊடகவியலாளர் வீணா ஜார்ஜ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் ஆரண்முலா தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வென்றுள்ளார். சிபிஎம்-ன் மாணவர் பிரிவான எஸ்எஃப்ஐ மூலம் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய வீணா ஜார்ஜ், கல்லூரி படிப்புக்குப்பின் தீவிர அரசியலில் இருந்து ஒதிங்கினார். இதன்பின்னர் பத்திரிக்கை துறையின் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை பதிவு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து இந்திய பத்திரிக்கையாளர்களில் வீணா ஜார்ஜும் ஒருவர். இவர் பத்திரிக்கையாளர், செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பலவற்றில் பணியாற்றியுள்ளார். இதற்காக சிறந்த செய்தி வழங்குநருக்கான கேரள தொலைக்காட்சி விருது வீணா ஜார்ஜுக்கு வழங்கப்பட்டது. வட அமெரிக்க பிரஸ் கிளப் மற்றும் யுஏஇ கிரீன் சாய்ஸ் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

இயற்பியல் மற்றும் பி.எட் ஆகியவற்றில் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற வீணா ஜார்ஜ், பத்தினம்திட்டாவில் உள்ள கத்தோலிக்க கல்லூரியில் ஆசிரியையாக ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். வீணா ஜார்ஜின் தாய் ரோசம்மா குரியகோஸ் முன்னாள் நகராட்சி கவுன்சிலராக இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் எல்.டி.எஃப் கட்சியின் வேட்பாளராக வீணா ஜார்ஜ் களமிறங்கினார். இவர் போட்டியிட்ட ஆரண்முலா தொகுதி யுடிஎஃப் கோட்டையாக கருதப்பட்டது. மேலும் அங்கு சிட்டிங் எம்.எல்.ஏ-வாக வழக்கறிஞர் சிவதாசன் நாயர் இருந்தார். தனது முதல் தேர்தலியே இவரை 7000 வாக்குகள் வித்தியாசத்தில் வீணா ஜார்ஜ் தோற்கடித்தார். இதனை அடுத்து இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

நாளை பதவியேற்க இருக்கும் பினராயி விஜயன் அரசில் மொத்தம் இரண்டு பெண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் வீணா ஜார்ஜும் ஒருவர். இவருக்கான இலக்கா குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. முன்னாள் அமைச்சர் சைலஜா டீச்சர் போல வீணா ஜார்ஜும் கவனம் இருப்பார் என அம்மாநில மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்