'நம்பி தானே பழகுனேன்'...'இன்ஸ்டாகிராமில் நண்பன் விரித்த 'வலை'...'ஐடி' பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பள்ளி தோழியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி, திருமண மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்தவர் ரேவதி. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக விவாகரத்து கேட்டு வழக்குத் தொடர்ந்தார். இதற்கு அவரின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணந்தால், அவர்களை விட்டு பிரிந்து தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இதனிடையே ரேவதிக்கு இன்ஸ்டாகிராமில் கேரளாவைச் சேர்ந்த ஜிதின்ஷா என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இவர்  15 வருடங்களுக்கு முன்பு ரேவதியுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்துள்ளார். இதனால் பள்ளி நண்பன் என்ற அறிமுகத்தில் அவரிடம் பழக ஆரம்பித்துள்ளார்.

இதனிடையே கணவனை விட்டு பிரிந்த சோகத்தில் இருந்த அவர், ஜிதின்ஷாவிடம் தனது கஷ்டங்களை பகிர்ந்துள்ளார். அப்போது தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று கூறிய ஜிதின்ஷா, ரேவதியிடம் அதிக நெருக்கம் காட்டியுள்ளார். இதையடுத்து இருவரும் செல்போன் மூலம் பேசி பழகி வந்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் ஜிதின்ஷா மீது நம்பிக்கை வைத்த ரேவதி, அவரை திருமணம் செய்துகொண்டு வாழ முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து இருவரும் நேரில் சந்தித்து திருமணம் குறித்து பேசியுள்ளார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல திருமணம் செய்வதை தள்ளிப்போட்டுக் கொண்டே சென்ற ஜிதின்ஷா, அவசர தேவை என கூறி, ரேவதியிடமிருந்து 7 லட்சம் ரூபாய் வரை ஜிதின்ஷா கறந்துள்ளார். இந்த சூழ்நிலையில் ரேவதிக்கு அமெரிக்காவில் இருந்து முகநூலில் அறிமுகமான சின்னுஜேக்கப் என்பவர், தான் ஜிதின்ஷாவின் முதல் மனைவி என்றும், அவர் பெரிய மோசடி மன்னன் எனவும், ஏற்கனவே திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் ஒருவரிடம் 30 லட்சம் வரை ஏமாற்றி இருப்பதாக கூறியுள்ளார். அதோடு ரேவதியையும் உஷாராக இருக்குமாறு எச்சரித்துள்ளார்.

அப்போது தான், ஜிதின்ஷா தன்னை பிளான் போட்டு ஏமாற்றியது ரேவதிக்கு உணர்ந்தது. இதையடுத்து ஜிதின்ஷாவிடம் பிரச்சனை செய்த ரேவதி, தனது பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்ற ஜிதின்ஷா,செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் மீண்டும் ரேவதியை அமெரிக்காவில் இருந்து தொடர்பு கொண்ட சின்னுஜேக்கப், ஜிதின்ஷா பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும், விரைவில் துபாய் செல்ல இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டது குறித்து ரேவதி காவல்துறையில் புகார் அளித்தார். அவருடைய புகாரில் ''ஜிதின்ஷா, வெளிநாட்டில் வேலை தேடி வருவதாகவும், வேலை கிடைத்ததும் இருவரும் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடலாம் எனக் கூறி 7 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு தன்னை ஏமாற்றி பணம் பறித்து மோசடி செய்ததாகவும், 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஜிதின்ஷா ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளதாக அவரது மனைவி சின்னுஜேக்கப் கூறியதாகவும் ரேவதி தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து ஜிதின்ஷா குறித்த தகவல்களை அவரது முதல் மனைவி மூலம் பெற்ற காவல்துறையினர், ஆலப்புழாவில் இருந்து பேருந்து மூலம் கோவை வழியாக பெங்களூர் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் துபாய் செல்ல ஜிதின்ஷாவை, கோவையில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல், ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பணம் பறித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சமூகவலைத்தளங்களில் பெண்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள்.

KERALA, INSTAGRAM, CHEATING, ARRESTED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்