'காசிமேட்டில் ஆர்ப்பரிக்கும் அலை'... 'படகில் கரைக்குத் திரும்பிய மீனவர்கள்'... நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நிவர் புயல்  நெருங்கி வரும் நிலையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகு கரைக்குத் திரும்பும் வீடியோ ஒன்று காண்போரைப் பதைபதைப்பில் ஆழ்த்தியுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், உள் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பிய நிலையில், அது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது. அதே போன்று சென்னை மெரினா மற்றும் காசிமேடு கடல் பகுதிகள் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. காசிமேட்டில் உள்ள துறைமுகத்தில் லைட் ஹவுஸ் பகுதிகளில் கடல் அலைகள் தடுப்புச் சுவர்களைத் தாண்டி வருவதால் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இந்தச்சூழ்நிலையில் காசிமேட்டைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில் புயல் காரணமாகக் கரைக்குத் திரும்பிய போது அலையின் சீற்றம் காரணமாக அவர்கள் வந்த படகானது கடும் சிரமத்திற்கு ஆளானது. கரையை நெருங்கிய நிலையிலும், படகு அலையில் சிக்கித் தவிக்கும் வீடியோ வெளியாகிக் காண்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்