மாப்பிள்ளைத் தோழனாக மணமேடையில் இருந்தேன்.. சண்முகநாதன் மறைவுக்கு ஸ்டாலின் கண்ணீர்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முக நாதன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு கண்ணீர் மல்க முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர்.

Advertising
>
Advertising

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நிழலாக 48 ஆண்டுகாலம் அவரோடு பயணித்தவர் சண்முகநாதன். கருணாநிதியின் கண் அசைவை வைத்தே அவர் என்ன எதிர்பார்க்கிறார், யாரிடம் எதைக் கூறச் சொல்கிறார் என்பதை அறிந்துக்கொள்வார் சண்முகநாதன். தமிழக காவல்துறையில் சுருக்கெழுத்தராக பணியாற்றி வந்த சண்முகநாதனை கடந்த 1967-ம் ஆண்டு பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தனது உதவியாளராக அழைத்துக்கொண்டார் கருணாநிதி.

கருணாநிதியுடன் மனக்கசப்பு ஏற்பட்டு இரண்டு முறை கோபித்துக்கொண்டு புறப்பட்ட இவரை அடுத்த ஓரிரு நாட்களில் கோபாலபுரத்தில்ஆஜராக வைத்துவிடுவார் கருணாநிதி. சண்முகநாதனின் தந்தை மறைந்த போது இடுகாடு வரை நடந்தே சென்று அஞ்சலி செலுத்தி தனது உதவியாளரை அவரது ஊரார், உறவினர்கள் முன்னிலையில் பெருமைப்படுத்தியுள்ளார் கருணாநிதி. மு.க.அழகிரி, ஸ்டாலின், செல்வி, என எல்லோரும் சண்முகநாதன் பார்க்க வளர்ந்தவர்கள் தான்.

கருணாநிதி மறைந்தது முதலே மனமுடைந்து காணப்பட்ட சண்முகநாதனுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு அதற்காக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர்  வீட்டில் செவிலியர்கள் கண்காணிப்பில் சிகிச்சையை தொடர்ந்து வருகிறார். அண்மையில் முத்துவிழாவாக கொண்டாப்பட வேண்டிய சண்முகநாதனின் 80-வது பிறந்தநாளையொட்டி அவரை இல்லம் தேடிச்சென்று வாழ்த்தி வணங்கி வந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்நிலையில் வயோதிகம் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட சண்முகநாதன் இன்று காலமானார். அவரது உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.

வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..
நேற்று நான் அவரைக் காவேரி மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்தபோது, “அடிக்கடி என்னை எதற்காக வந்து சந்திக்கிறாய்? நீ உனது பணிகளைக் கவனி” என்று உரிமையோடு சொன்னார். அத்தகைய அன்புள்ளத்தை இவ்வளவு சீக்கிரமாக இழப்போம் என்று நான் நினைக்கவில்லை.

அவரின் திருமணத்திற்காகப் பெண் பார்க்கச் சென்றது, மாப்பிள்ளைத் தோழனாக மணமேடையில் இருந்தது என்று அவருடன் நெருக்கமாகப் பழகியிருக்கிறேன்.  அண்ணன் என்ற உறவையும் தாண்டி, அவரை எனது உயிராகத்தான் நான் கருதி வந்தேன். எப்போது எந்தக் கூட்டத்தில் நான் பேசினாலும், பேசி முடித்ததும் அவருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொள்வேன். 'நேரலை பார்த்தீங்களா?' என்று அவரது கருத்தைக் கேட்பேன். அவர் பாராட்டுவார், திருத்தம் சொல்வார், உற்சாகப்படுத்துவார்.

உதவியாளர், செயலாளர் என்பதையெல்லாம் தாண்டி கருணாநிதியின் நிழலாக இருந்தவர் சண்முகநாதன். கருணாநிதி அவர்களுக்கு இன்னொரு கையாக இருந்தவர் அவர். சுமார் 50 ஆண்டுகாலம் கருணாநிதியுடன் பயணித்தவர் அவர். அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரைக்கும் கோபாலபுரம் வீட்டிலேயே இருப்பார்.

கோபாலபுரம் வீட்டிற்குள் நுழைந்ததும் வலதுபுறம் அவரின் அறை இருக்கும், அங்குள்ள கணினி முன் அமர்ந்து எப்போதும் வேலை செய்துகொண்டே இருப்பார். தலைவரைப் பார்க்க திமுக நிர்வாகிகள் வந்தாலும்  நானும் அவரும் அந்த அறையில்தான் இருப்போம்.

கருணாநிதி அவர்களைப் பிரிந்து அவராலும் இருக்க முடியாது. அவரைப் பிரிந்து கருணாநிதியாலும் இருக்க முடியாது என்பதுதான் உண்மை.

கருணாநிதி மறைந்த பிறகும், அவர் இருந்த காலத்தில் கோபாலபுரம் வீட்டுக்கு எப்படி வருவாரோ அதேபோல் வந்து எழுதுவது, அச்சிடுவது, மெய்ப்புத் திருத்தம் செய்வது என சண்முகநாதன் இருப்பார். கருணாநிதி உடன்பிறப்புகளுக்கு எழுதிய அனைத்துக் கடிதங்களையும் பல்வேறு தொகுதிகளாகத் தொகுத்து வெளியிடும் அரிய பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவை அனைத்தும் அச்சில் இருக்கும் நிலையில் சண்முகநாதன் மறைந்தது அதிர்ச்சியடைய வைக்கிறது.

கருணாநிதி வரலாற்றின் அனைத்துப் பக்கங்களையும் எழுதும் தகவல் களஞ்சியம் அவர். அரை நூற்றாண்டு கால தமிழக அரசியலை முழுமையாக அறிந்த வரலாற்றுப் புத்தகம் அவர். அனைத்துக்கும் மேலாக எங்களது கோபாலபுரக் குடும்பத்தின் ஒரு முக்கியமான தூண் சரிந்துவிட்டது.

எங்கள் குடும்பத்தில் எல்லோரும் அவரை 'குட்டி பி.ஏ.' என்றுதான் அழைப்போம். இருப்பவர்களிலேயே அவர்தான் வயதால் இளைஞர். இன்று எங்கள் அனைவருக்கும் மூத்த அண்ணன் நிலையில் இருந்தார். தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு இது. இவ்வாறு தமது இரங்கல் செய்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

SHANMUGANATHAN, MK STALIN, KARUNANIDHI, KARUNANIDHI AID, கருணாநிதி, ஸ்டாலின், கருணாநிதி உதவியாளர், சண்முகநாதன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்