'கையில குடை...' 'டிராக்டரில வாழைக்கொலை...' எதுக்காக டிராக்டரில் திருமண ஊர்வலம்...? - அசர வைத்த திருமண ஜோடி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப்பெற கோரி நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக குமரி மாவட்டத்தில் மணமக்கள் டிராக்டரில் ஊர்வலம் சென்றுள்ளனர்.

மத்திய அரசு கடந்த வருடம் வெளியிட்ட வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் கடந்த 60 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பலக்கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகும் முடிவு எட்டப்படவில்லை. மேலும் குடியரசு தினமான இன்று டெல்லியில் டிராக்டர் பேரணியும் விவசாயிகள் நடத்தப்பட்டது.

இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக குமரி மாவட்டம் அருமனை அருகே பொறியாளர் ஒருவர், தனது திருமணத்தின் போது டிராக்டரில் மணமகளுடன் ஊர்வலமாக வந்து, விவசாயிகளின் போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

குமரி மாவட்டம் அருமனை அடுத்த மாங்கோடு ஊராட்சி அம்பலக்காலை பகுதியை சேர்ந்தவர் கட்டிட பொறியாளர் ஜெரின். இவருக்கும், கொல்லங்கோடு அருகே உள்ள பாத்திமா நகரை சேர்ந்த பபி  என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இவர்களின் திருமணம் நேற்று நடைபெற்றது.

இந்நிலையில் திருமண வரவேற்பு எப்போதும் அலங்கரிக்கப்பட்ட காரில் தான் மணமக்கள் இருவரும் ஊர்வலமாக வருவர். ஆனால் ஜெரின் மற்றும் பாத்திமா திருமணத்தில் இருவரும் அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் ஊர்வலமாக வந்தனர்.

இந்த ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மண்டபத்தில் இருந்து வீட்டிற்கும் அதே டிராக்டரிலேயே சென்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கூறிய தம்பதிகள், 'விவசாயிகள் தங்களது கோரிக்கைக்காக கடும் பனி, வெயிலை கூட பொருட்படுத்தாமல் போராடி வருகிறார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் ஆதரவு தெரிவிக்கவே அவர்களை நினைவுப்படுத்தும் வகையில் டிராக்டரில் ஊர்வலமாக வந்தோம்' எனக் கூறியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்