'சாப்ட்வேர் மூளை'... 'டாய்லெட்டில் இருந்த கேமரா செயல்பட்டது எப்படி'?... நாகர்கோவில் சாஃப்ட்வேர் நிறுவன உரிமையாளர் குறித்த பகீர் தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தி காட்சிகளை பதிவுசெய்த சாப்ட்வேர் கம்பெனி ஓனரின் வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சு (29).

இவர் செட்டிகுளம் பகுதியில் z3 இன்ஃபோடெக் என்ற சாஃப்ட்வேர் நிறுவனத்தைக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியிருக்கிறார்.

அவரது நிறுவனத்தில் பணிபுரிய மூன்று பெண்களையும் வேலைக்கு அமர்த்தியிருக்கிறார் சஞ்சு.

இதற்கிடையில் அந்த நிறுவனத்தில் பணி செய்துவரும் பெண் ஊழியர் ஒருவர் கழிவறைக்குச் சென்றபோது, அங்கே மின்விளக்கு மாட்டும் பகுதியில் வித்தியாசமாக ஒரு பொருள் இருப்பதைப் பார்த்திருக்கிறார்.

அது என்னவென்று ஆராய்ந்தபோது ரகசிய கேமரா எனத் தெரியவந்தது. கழிவறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ரகசிய கேமராவை கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் ஊழியர் உடனடியாக வெளியேறிவிட்டார்.

பின்னர் அது குறித்து மற்ற பெண் ஊழியர்களுக்கும் தகவல் கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, பெண் ஊழியர்கள் ஒன்றாகச் சேர்ந்து நிறுவன உரிமையாளரான சஞ்சுவிடம் ரகசிய கேமரா பொருத்திய காரணம் குறித்துக் கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு சஞ்சு முன்னுக்குப் பின் முரணாக பதில்கூறி சமாளித்திருக்கிறார். மேலும், அந்தப் பெண் ஊழியர்களை மிரட்டும் தொனியிலும் பேசியிருக்கிறார். இதனால், அவர்மீது சந்தேகம்கொண்ட பெண் ஊழியர்கள் ரகசிய கேமரா தொடர்பாக கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

உடனடியாக அங்கு சென்ற போலீஸார் சஞ்சுவைப் பிடித்து விசாரித்தனர். மேலும், அவர் கழிவறையில் பொருத்தியிருந்த ரகசிய கேமரா, அவரது லேப்டாப், அங்கிருந்த ஹார்டு டிஸ்க்  உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர், சஞ்சுவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், கழிவறையில் பொருத்ப்பட்ட ரகசிய கேமராவில் பதிவாகும் காட்சிகளை அவரது மொபைல்போனில் பார்க்கும் வகையில் உருவாக்கியிருப்பது தெரியவந்தது.

மேலும், அவரது மொபைல்போனை ஆய்வு செய்ததில் சஞ்சு சில நண்பர்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. எனவே, அவர்களுக்கும் இதில் சம்பந்தம் இருக்குமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சஞ்சுவைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். ரகசிய கேமராவில் பதிவாகும் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பவும், சம்பந்தப்பட்ட பெண்களிடம் பணம் பறிக்கவும் சஞ்சு திட்டமிட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து கோட்டார் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்