'ஏடிஎம் சென்டருக்கு போறப்போ அக்கவுண்ட்ல பணம் இருந்துச்சு...' 'மெஷின்ல பணம் எடுக்க தெரியல...' 'அடுத்த நாள் அக்கவுண்ட்ல பணம் இல்ல...' - ATM சென்டர்ல இளைஞர் செய்த மோசடி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியாத முதியவரிடம் உதவி செய்வதாக கூறி சுமார் ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்த இளைஞரை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 53 வயதான சந்திரன். விவசாயம் செய்து வரும் இவர் கடந்த ஜனவரி 16-ம் தேதி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவில் உள்ள எஸ்பிஐ  ஏடிஎம்-மில் பணம் எடுக்க வந்துள்ளார்.

அங்கிருந்த ஏ.டி.எம்மில் பணம் எடுக்க தெரியாததால், ஏ.டி.ஏம் வெளியே நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை அழைத்து பணம் எடுத்து தருமாறு உதவி கேட்டுள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த இளைஞர், பணம் எடுத்துத் தருவதுபோல் ஏமாற்றிவிட்டு பணம் வரவில்லை என்று சொல்லி போலியான ஏடிஎம் கார்டை மாற்றி சந்திரனிடம் கொடுத்துள்ளார். மோசடி குறித்து அறியாத முதியவர் சந்திரன் வீட்டுக்குச் சென்றுள்ளார். அதையடுத்து சிறிது நேரத்தில் சந்திரன் வங்கிக் கணக்கில் இருந்து அந்த இளைஞர் ரூ. 40 ஆயிரம் பணம் எடுத்துள்ளார்.

அடுத்த நாள் அதே ஏடிஎம்-மில் பணம் எடுக்க வந்த போது அவரது வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்பதும், தன்னிடம் உள்ளது போலியான ஏடிஎம் கார்டு எனவும் தெரியவந்தது. இதுகுறித்து, முதியவர் சந்திரன் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

முதியவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சிவகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள், நேற்று ஏகாம்பரநாதர் சன்னதி தெரு, அரசு காத்தம்மன் கோயில் எதிரில் உள்ள எஸ்பிஐ வங்கி அருகே நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரித்துள்ளனர்.

அப்போது அந்த இளைஞர் தான் முதியவர் சந்திரனிடம் இருந்து ஏடி.எம் கார்ட் மாற்றியதாகவும், இதுபோல பணம் எடுக்க தெரியாதவர்களிடம் பண மோசடி செய்வதும் தெரியவந்துள்ளது. மேலும் அந்த இளைஞர் தக்கோலம், பழனியப்பன் கோயில் தெருவில் உள்ள வசிக்கும் 26 வயதான ஏழுமலை என்பது தெரியவந்ததுள்ளது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஏழுமலையிடம், 11 ஏடிஎம் கார்டுகள் மற்றும் கையாடல் செய்த பணத்தில் செலவு செய்தது போக மீதமுள்ள ரூ. 36, 500 மற்றும் டூ வீலரையும் பறிமுதல் செய்தனர். மேலும் ஏழுமலையை காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்