'ஏன்டா உன்ன கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வச்சது இதுக்கு தானா'... 'சிசிடிவி காட்சிகளை பார்த்து ஆடி போன தந்தை'... சென்னையில் நடந்த பகீர் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜ்குமார் சோப்ரா. இவரும், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சுபாஷ்சந்த் போத்ரா என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து சவுகார்பேட்டை என்.எஸ்.சி.போஸ் சாலை வீரப்பன் தெருவில் தங்க நகைகள் மொத்த வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகின்றனர். இருவரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை என வாரத்தில் 2 நாட்கள் மட்டும் கடையைத் திறந்து வியாபாரம் செய்வது வழக்கம். அந்த வகையில் கடந்த  21-ந் தேதி வியாபாரத்தை முடித்த அவர்கள், கணக்குகளைச் சரி பார்த்து விட்டு கடையைப் பூட்டிச் சென்றனர்.

இதையடுத்து கடந்த 25ம் தேதி வியாபாரத்திற்காக மீண்டும் கடையை திறந்தபோது அவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. வியாபாரத்தை முடித்து விட்டு பூட்டி சென்ற கடையிலிருந்த 14 கிலோ தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது. இதுபற்றி யானைக்கவுனி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடயங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது கடை மற்றும் லாக்கர் பூட்டுகள் உடைக்கப்படாததால் கள்ளச்சாவி போட்டு நகையைத் திருடியது போலீசாருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

கடை மற்றும் லாக்கர் பூட்டுகள் உடைக்கப்படாமல் திருட்டு நடைபெற்று இருப்பதால், நிச்சயம் தெரிந்த நபர்கள் தான் இதை செய்திருக்க வேண்டும் என போலீசார் சந்தேகப்பட்டார்கள். இதையடுத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராகளை போலீசார் ஆய்வு செய்தார்கள். அதில் இளைஞர் ஒருவர் பெரிய பையுடன் அந்த பகுதியில் சுற்றித்திரிந்தது தெரிந்தது. அதை கடை உரிமையாளர்களில் ஒருவரான சுபாஷ்சந்த் போத்ராவிடம் போலீசார் காட்டி, அந்த நபர் குறித்து விசாரித்தார்கள். அப்போது அந்த காட்சிகளை பார்த்த சுபாஷ்சந்த் போத்ரா, அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த வீடியோவில் இருந்தது, சுபாஷ்சந்த் போத்ராவின் மகன் ஹர்ஷ் போத்ரா.

அதனைத்தொடர்ந்து சுபாஷ்சந்த் போத்ராவின் மகன் ஹர்ஷ் போத்ரா கைது செய்யப்பட்டார். பின்னர் போலீசார் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், நான் தான் 14 கிலோ நகைகளை திருடினேன் என ஒத்துக் கொண்டார். எதற்காகத் திருடினேன் என்பது குறித்து வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். அதில், ''ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக ஆர்வம் கொண்ட ஹர்ஷ் போத்ரா, அந்த தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே கடனை அடைக்க முடிவு செய்த அவர், கள்ளச்சாவி போட்டுக் கடை மற்றும் லாக்கரை திறந்து நகையைத் திருடியதாக'' கூறியுள்ளார்.

சொந்த மகனே தனது கடையில் திருடியது, சுபாஷ்சந்த் போத்ராவை நிலைகுலையச் செய்துள்ளது. சொந்த கடையில் திருடிய வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்