ஜெயலலிதா குறித்து நேருக்கு நேர் விவாதம்!.. திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு... ஜெ. முன்னாள் வக்கீல் சவால்!.. வலுக்கும் மோதல்!.. பின்னணி என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து திமுக எம்.பி ஆ.ராசா அவதூறாக பேசி வருவதாக ஜெயலலிதாவின் முன்னாள் வழக்கறிஞர் ஜோதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஜோதி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஜெயலலிதாவுக்காக 11 வழக்குகளில் நான் வாதாடியுள்ளேன். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து திமுக எம்.பி ஆ.ராசா அவதூறாக பேசி வருகிறார். ஆ.ராசா பேசியதில் எனக்கு வருத்தம்.

ஆ.ராசா 2ஜி வழக்கில் இருந்து விடுதலையானது போலவே ஜெயலலிதாவும் வழக்கில் இருந்து விடுதலையாகிவிட்டார். ஜெயலலிதா அரசியலமைப்பு சட்டத்தை மீறியவர், கொள்ளைக்காரி என தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிடவில்லை. ஜெயலலிதா இறந்தவுடன் நீதிமன்றத்தில் வழக்கை நடத்த வேண்டாம் என ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை தாக்கல் செய்திருக்க வேண்டும்.

ஆனால், அவர்கள் செய்யவில்லை. ஏன் செய்யவில்லை என்றால் சசிகலா முதலமைச்சர் ஆக முன்னேற்பாடுகள் செய்து கொண்டிருந்த நேரம் அது. சுயலாபத்திற்காக சசிகலா தாக்கல் செய்யவில்லை. அவ்வாறு செய்திருந்தால் ஜெயலலிதா பெயரே வந்திருக்காது.

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்குப்பற்றி எனக்கு தெரியும் என்பதால் நான் பதில் கூறுகிறேன். ஆ.ராசாவுடன் அவர் சொல்லும் இடத்தில் விவாதிக்க தயார். பிரிவு 394ன் கீழ் ஜெயலலிதா குற்றமற்றவர்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக, சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தேவையற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தம் மீது தெரிவிப்பதாக கூறினார். மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மிகப் பெரிய ஊழல். தமிழ்நாட்டின் பட்ஜெட் அளவுக்கு பெரியது. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவில் கொள்ளையடித்த கட்சி தி.மு.க எனத் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி ஆ.ராசா, "ஊழல் குற்றச்சாட்டில் திமுகவில் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. தற்போதைய முதல்வர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் அல்ல.

ஆனால் 2ஜி உட்பட ஏதாவது ஒரு குற்றச்சாட்டில், குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கும் என்றால் நாளையோ, நாளை மறுநாளோ கோட்டையில், எல்லா ஊடகங்கள் முன்னிலையில், 2ஜி, சர்க்காரியா கமிஷன் குறித்து விவாதிக்க அவர் தயாரா? ஜெயலலிதா வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ன என்பதை விவாதிக்க தயாரா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்