‘டாக்டர் சைமன் மனைவியின் கோரிக்கை நிராகரிப்பு’... ‘சென்னை மாநகராட்சி விளக்கம்’... ‘உலக சுகாதார அமைப்பை மேற்கோள் காட்டிய மனைவி’ !

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மருத்துவர் சைமன் உடலை மறு அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சைமன், கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரது உடலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி கிறிஸ்துவ கல்லறையில் அடக்கம் செய்ய முயன்றபோது, அவரை அங்கு அடக்கம் செய்யக்கூடாது என்று அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் தடுத்து, கற்களை வீசி தாக்கியதில் ஆம்புலன்ஸ் வாகனம் சேதமடைந்தது.

இதையடுத்து கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பாக அவரது உடல் வேலங்காடு இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. தனது கணவரின் கடைசி ஆசைப்படி அவரது உடலைத் தோண்டி தங்கள் மதம் சார்ந்த கிறிஸ்துவ கல்லறையில் மீண்டும் அடக்கம் செய்ய உதவும்படி முதல்வரிடம் மருத்துவர் சைமன் மனைவி ஆனந்தி சைமன் கோரிக்கை வைத்தார். இந்த விவகாரம் இந்தியா முழுதுவம் பேசுபொருளானது.

இந்நிலையில், கிறிஸ்தவ முறைப்படி தங்கள் மதம் சார்ந்த கல்லறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற டாக்டர் சைமன் மனைவி வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி கொடுத்த விளக்கத்தில், ‘மருத்துவரின்  மனைவி ஆனந்தி சைமன் 22-ம் தேதி அளித்த வேண்டுகோள் தொடர்பாக பொது சுகாதாரத் துறை வல்லுநர்கள் அடங்கிய குழுவின் அறிக்கை கோரப்பட்டது.

அவர்கள் அறிக்கையின்படி  கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக மரணமடைந்த நபரின் உடல் பாதுகாப்பான முறைப்படி அடக்கம் செய்யப்பட்டபின், மீண்டும் வெளியில் எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்பதால் ஆனந்தி சைமனின் கோரிக்கையை ஏற்பது சாத்தியமில்லை என இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது’ என கூறியுள்ளது.

இதற்கிடையில், "உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, வைரஸ் இறந்த நபரின் உடலில் வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே இருக்கும். அதன்படி, எனது கணவரின் உடலை சென்னையில் உள்ள வேலங்காடு இடுகாட்டில் இருந்து அகற்றி கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்யலாம்" என்று மருத்துவர் சைமனின் மனைவி நியூஸ் 18-க்கு பேட்டியளித்துள்ளார். கணவரின் இறுதி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதில் விருப்பத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்