'அதிரடிக்கு மறு பெயர் 'அனு'... 'மீண்டும் எங்க ஊருக்கே வந்துருங்க மேடம்'... கலங்கி நின்ற மொத்த கிராமம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பணி மாற்றம் செய்யப்பட்ட சார் ஆட்சியருக்காக ஒரு கிராமமே கலங்கி நின்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் நலத்திட்டங்களைக் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு செல்வது, மக்களின் அடிப்படை பிரச்சனைகளைச் சரி செய்வது, அரசுக்கும் மக்களுக்கும் பலமாக விளங்குவது போன்றவற்றில் முக்கிய பங்காற்றுபவர்கள் அரசு அதிகாரிகள். இது மக்களுக்கான பணி என்பதை அறிந்து பல அரசு அதிகாரிகள் செயல்பட்டு வரும் நிலையில், இவர் நமக்கான குரலாக ஒலிக்கிறார் என மக்களின் மனதில் பதிந்து விட்டால் அந்த அதிகாரியை தங்கள் வாழ்நாள் முழுவதும் அவர்கள் மறக்கமாட்டார்கள்.

அந்த வகையில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட திண்டிவனம் சார் ஆட்சியர் அனு ஐ.ஏ.எஸ்க்காக ஒரு கிராமமே கலங்கி நின்றுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த அனு கடந்த 2019 அக்டோபர் மாதம் திண்டிவனம் சார் ஆட்சியராக பணியமர்த்தப்பட்டார். இளம் வயது பெண் ஐ.ஏ.எஸ். ஆன இவரது செயல்பாடுகள் எப்படி இருக்குமோ என அப்பகுதி மக்கள் எண்ணினார்கள்.

ஆனால், இவரது 20 மாத பனிக்காலத்தில் மிகவும் திறமையாக, செம்மையாக, துணிவாக மக்கள் பணி செய்து திண்டிவனம் கோட்டத்தில் உள்ள மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். குறிப்பாக திண்டிவனம் மேல்மலையனூர், செஞ்சி, மரக்காணம் ஆகிய தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் பழங்குடி இருளர் மக்களின் பிள்ளைகள் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்காகச் சாதிச் சான்றிதழ் கேட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார்கள்.

இவர்களின் மனுக்களை முறையாக ஆய்வு செய்த சார் ஆட்சியர் அனு, அவர்களுக்குச் சாதிச் சான்றிதழ் வழங்கினார். இது மட்டுமின்றி, கல்குவாரிகளில் இருந்து லோடு ஏற்றிச் செல்லும் லாரிகளை மடக்கிப் பிடித்து, விசாரணை செய்து பர்மிட் இல்லாத லாரிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்து வழக்குப் போட வைத்துள்ளார்.

பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் தங்கள் சொத்துக்களை எழுதிவைத்துவிட்டு அவர்களின் அரவணைப்பும் கவனிப்பும் இல்லாமல் இருந்த முதியோர்கள், அவர்களின் நிலையை மனுவாகச் சார் ஆட்சியர் அனுவிடம் கொடுத்தபோது, அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு எழுதிக்கொடுத்த சொத்துக்களை மீட்டு அந்த முதியோர்கள் தங்கள் விருப்பப்படி அனுபவித்துக் கொள்ள வழிவகை செய்தார்.

இவ்வாறு அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் இடம்பிடித்த சார் ஆட்சியர் அனுவை  தமிழக அரசு, தலைமைச் செயலகத்தில் உள்ள மரபுகள் துறை துணைச் செயலாளராகப் பதவி உயர்வு அளித்து, பணி மாறுதல் செய்துள்ளது. அனு பதவி உயர்வு பெற்று மாறுதலாகிச் செல்கிறார் என அந்த கிராம மக்கள் சந்தோசப்பட்டாலும், அனுவின் மாறுதல் அந்த பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் “சார் ஆட்சியர் அனு, மீண்டும் எங்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்கும் காலம் வரவேண்டும், அதற்காக நாங்கள் காத்திருப்போம் என அந்த பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

மற்ற செய்திகள்