'அன்று 'அமித்ஷா'வை கைது செய்து அதிரடி காட்டியவர்'... 'இன்று தமிழக லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபி'... யார் இந்த கந்தசாமி ஐபிஎஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வராக மே 7 அன்று மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில், அதிகாரிகள் மட்டத்தில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார்.

இதன் பின்னர் சென்னை மாநகர காவல்துறை ஆணையர், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி, மற்றும் உளவுத் துறை டிஜிபி பதவிகளுக்கும் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். அந்த வகையில் கோவை நகர ஆணையராகப் பதவி வகித்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு, உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். முதல்வருக்கு 4 தனிச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டனர். சென்னை மாநகராட்சி ஆணையரும் மாற்றப்பட்டார்.

இந்நிலையில், தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காவல் பயிற்சிக் கல்லூரி சிறப்பு டிஜிபியாக இருந்த ஷகீல் அக்தர், சிபிசிஐடி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறப்பு டிஜிபியாக (நிர்வாகத்துறை) இருந்த கந்தசாமி, காலியாக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறப்பு அதிரடிப் படையின் (ஈரோடு) ஏடிஜிபியாக இருந்த எம்.ரவி, சிறப்பு டிஜிபியாக (நிர்வாகத்துறை) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உளவுத்துறை ஐஜியாக இருந்த ஈஸ்வரமூர்த்தி, காலியாக இருந்த உளவுத்துறை (உள்நாட்டு பாதுகாப்பு) ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழில்நுட்ப சேவைப் பிரிவின் டிஐஜியாக இருந்த ஆசையம்மாள், காலியாக இருந்த உளவுத்துறை டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக இருந்த அரவிந்தன், குற்றப்பிரிவு சிஐடி எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி காவலர் பயிற்சிப் பள்ளி எஸ்.பி.யாக இருந்த சரவணன் குற்ற நுண்ணியல் கண்காணிப்பு பிரிவு எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூர் துணை ஆணையராக இருந்த திருநாவுக்கரசு, பாதுகாப்புப் பிரிவு சிஐடி - 1 எஸ்.பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நவீன காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக இருந்த சாமிநாதன், பாதுகாப்புப் பிரிவு சிஐடி - 2 எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே இந்த அதிகாரிகளின் மாறுதல் பட்டியலில் குறிப்பிடத்தகுந்த மாறுதலாகப் பார்க்கப்படுவது லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள கந்தசாமி ஐபிஎஸ்யின் நியமனம் தான். இவர் கடந்த  2010ம் ஆண்டு சிபிஐயில் ஐஜியாக பணியாற்றிய நேரத்தில் குஜராத் சொராபூதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கை விசாரணை செய்தார். அந்த வழக்கில் தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கைது செய்து அதிரடி காட்டினார்.

இந்நிலையில் கந்தசாமி ஐபிஎஸ் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மற்ற செய்திகள்