VIDEO: 'என் 'அம்மா' மட்டும் இல்லனா?'... பிரபலங்களை கலங்கடித்து... மக்கள் மனதை வென்ற 'பிரித்திகா யாஷினி' யார்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியாவின் முதல் திருநங்கை காவல் ஆய்வாளரான பிரித்திகா யாஷினியின் தாயார் பேச்சு, பிரபலங்களை கண் கலங்க வைத்துள்ளது.

பல்வேறு துறைகளில் இருக்கும் ஆகச்சிறந்த ஆளுமைகளைத் தேர்வு செய்து, அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக Behindwoods ஆண்டுதோறும் தங்கப்பதக்கவிழாவை நடத்திவருகிறது. அந்த வகையில், சமீபத்தில் நடந்த Behindwoods Gold Medals விழாவில், இந்தியாவின் முதல் திருநங்கை காவல் ஆய்வாளரான பிரித்திகா யாஷினிக்கு Icon of Inspiration என்ற விருது வழங்கப்பட்டது.

பல ஆண்டு காலமாக, சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக மூன்றாம் பாலினத்தவர்கள் இருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகளும், அவமதிப்புகளும் ஏராளம். அத்தகைய சூழலில், தன்னுடைய வாழ்வில் குறுக்கிட்ட அத்தனை தடைக்கற்களையும் வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றி, பல துயரங்கள் கடந்து உயரம் தொட்டுள்ளார், பிரித்திகா யாஷினி.

தன்னுடைய கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் இந்தியாவின் முதல் திருநங்கை காவல் ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, சாதனைத் தமிழச்சியாக இன்று உயர்ந்து நிற்கிறார்.

இந்த விருதை, முன்னாள் காவல் துறை அதிகாரியான ஜன்கித் அவர்களிடமிருந்து, பிரித்திகா பெற்றுக்கொண்டார். விருதைப் பெற்றுக் கொண்ட பின் பேசிய அவர், 'இந்த விருதை நான் முதலில் என் அம்மாவுக்கு கொடுக்க ஆசைப்படுகிறேன். எல்லாருக்கும் அம்மா தான் முதல் தெய்வம். என்னுடைய அம்மா இல்லை என்றால் நான் இந்த மேடையில் இல்லை. என் குடும்பத்தில் எல்லாவித எதிர்ப்புகளும் இருந்தபோது, என் அம்மாவினுடைய அரவணைப்புக்கும் பாசத்துக்கும் மட்டும் குறைவே இருந்ததில்லை. அவருடைய பாசம், அன்புக்கு ஈடு எதுவுமில்லை. அதனால் தான், நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன். இந்த மாதிரி ஒரு அம்மா கிடைத்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.

அதன் பின் பேசிய பிரித்திகாவின் தாயார் சுமதி, "எந்த தாயும் தன்னுடைய குழந்தையை வெறுக்க மாட்டார். அந்த குழந்தை எத்தகைய நிலையில் இருந்தாலும், நம்முடைய குழந்தை தான் என்று ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு நாம் துணை நிற்கும்போது, அனைத்து குழந்தைகளும் நல்ல நிலைக்கு வருவார்கள்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குப் போகும்போது, அங்கு நமக்கு கிடைக்கும் தோழிகள் நல்லவர்களாக இருப்பது அவசியம். அந்த வகையில், என் மகளுக்கு 'கிரேஸ் பானு' தோழியாக கிடைத்தார். அவர் தான் என் மகளுக்கு மிக உதவியாக இருந்தார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

சேறுமிடம் நல்லதாக இருந்து, பெற்றோர் துணையுடன், உடன் பயணிப்பவர்களும் நல்லவர்களாக இருந்தால், குழந்தைகள் நன்றாக வளர்வார்கள். இவ்வாறு அவர் பேசி முடிக்குபோது, பலத்த கரகோஷத்துடன் அரங்கில் குழுமியிருந்த பார்வையாளர்களும், பிரபலங்களும் கண் கலங்கினர்.

 

POLICE, PRITHIGA, TRANSGENDER, BGM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்