'சார், ஐடி ஆஃபீஸா'... 'வருமான வரித்துறைக்கு வந்த புகார்'... 'கோடிக்கணக்கில் சொத்து'... 'அதிரடியாக புகுந்த அதிகாரிகள்'... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரெய்டு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிரபல கிறிஸ்துவ மத போதகரான பால் தினகரன், 'இயேசு அழைக்கிறார்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் கிறிஸ்துவ ஜெப கூட்டங்களை நடத்தி வருகிறார்.

கோவையில் கல்வி நிறுவனங்களை பால் தினகரன் நடத்தி வரும் நிலையில், சென்னையிலும் இவருக்கு சொந்தமாக அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் சில இயங்கி வருகின்றன. அது மட்டுமில்லாமல், தமிழகத்தில் மேலும் சில இடங்களில் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களும் உள்ளன.

இந்நிலையில், சென்னையில் பாரிமுனை, அடையாறு உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள பால் தினகரனின் அலுவலகங்கள், கோவையில் நடத்தி வரும் காருண்யா பல்கலைக்கழகம், பள்ளி உட்பட மொத்தம் 28 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை அடையாறில் 'இயேசு அழைக்கிறார்' தலைமை அலுவலகம் அமைந்துள்ள நிலையில், சென்னை பாரிமுனை கடற்கரை சாலையில் பெரிய கட்டிடம் ஒன்றும் அமைந்துள்ளது. இந்த இடங்களில் எல்லாம் வருமானத்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர்.
  

பால் தினகரனுக்கு சொந்தமான காருண்யா பல்கலைக்கழகம் அருகே தான் இவரது வீடு, அலுவலகம், ஜெபக்கூடம் மற்றும் பள்ளி ஆகியவை அமைந்துள்ளது. காருண்யா பெதஸ்தா என அழைக்கப்படும் இங்கு இன்று காலை 8 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

கோவை புலியகுளத்தை அடுத்த அம்மன்குளம் பகுதியில் காருண்யா கிறிஸ்துவ பள்ளி ஒன்று உள்ளது. இங்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதே போல லட்சுமி மில் அருகே ஜெபக்கூடம் ஒன்று உள்ளது. அங்கு அதிகாரிகள் சோதனை நடத்த வந்த நிலையில், ஆட்கள் யாரும் அங்கு இல்லாததால் அவர்கள் சோதனை நடத்தாமல் திரும்பிச் சென்றனர்.

மொத்தமாக, இந்த வருமான வரி சோதனையில் இன்று 250 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்ட நிலையில், காலை 8 மணி முதல் 28 இடங்களிலும் ஒரே நேரத்தில் அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். இந்த இடங்களில் எல்லாம் வெளியே இருந்து யாரையும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அதே போல, சோதனை நடந்த இடங்களில் இருந்து யாரையும் வெளியே செல்லவும் அனுமதிக்கவில்லை.

பால் தினகரனின் நிறுவனங்கள் முறையாக வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் பெயரில் இந்த சோதனை நடைபெற்றதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனை முடிவுக்கு பின்னரே வரி ஏய்ப்பு தொடர்பான முழு விவரங்கள் தெரிய வரும்.

மற்ற செய்திகள்