‘மறுபடியும் தொடங்கும் மழை’.. 4 மாவட்டங்களில் ‘அதிகனமழை’-க்கு வாய்ப்பு.. சென்னை நிலவரம் என்ன..? வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertising
>
Advertising

கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுந்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் போல தண்ணீர் சென்றது. மேலும் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தற்போது கன்னியாகுமரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி வழிவதால், பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மீண்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று (17.11.2021) திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்யக்கூடும்.

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (18.11.2021) சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று இரவு மழை தொடங்கி நாளை ஒருசில பகுதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 19-ம் தேதி வரை இது தொடர வாய்ப்புள்ளது’ என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

RAIN, HEAVYRAIN, CHENNAIRAINS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்