கேலி செய்து 'பிராங்க்' வீடியோ வெளியிட்டாலும் குற்றமே... 'கேமரா மேனையும்' தூக்கி உள்ள வைப்போம்... கூடுதல் டி.ஜி.பி., 'ரவி' அடுத்த அதிரடி...
முகப்பு > செய்திகள் > தமிழகம்குழந்தைகள், சிறுவர், சிறுமியரை பயமுறுத்தி, ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில், குறும்புத்தனமான, பிராங்க் வீடியோ வெளியிட்டாலும், ஐந்து ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்றும், இதில் ஈடுபடும் கேமராமேன் போன்ற டெக்னீஷியன்களும் தண்டனைக்குறியவர்கள் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு, கூடுதல் டி.ஜி.பி., ரவி எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்று சிறுவன் ஒருவனிடம் பிராங்க் என்ற பெயரில், அவனை அடித்து கரண்ட் கம்பத்தில் தொங்கவிடுவேன் என்றும், அவனின் உள்ளாடை நிறங்களை கேட்டும் ஆபாசமாக ஒரு பிராங்க் வீடியோவை வெளியிட்டு இருந்தது. குழந்தைகளின் ஆபாச படங்களுக்கு தடை என்பது பெரும் சர்ச்சையாக இருந்த நேரத்தில் இவ்வாறு ஆபாச வார்த்தைகளை பேசுவது மட்டும் சரியா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த வீடியோ குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஏடிஜிபி ரவியிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த அவர், சிறுவர்கள் மற்றும் சிறுமியர் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்ப்பது மட்டுல்ல, அவர்களை கேலி செய்து, குறும்புத்தனமான வீடியோக்களை, ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளத்தில் வெளியிடுவதும் குற்றமே எனத் தெரிவித்தார். இதுபோன்ற, வீடியோ உருவாக்கத்தில் பின்னணியில் பணியாற்றும், 'கேமராமேன்' உள்ளிட்ட அனைவருக்கும், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில், 'போக்சோ' சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது யூட்யூப் சேனலில் வெளியாகியுள்ள வீடியோவை, சைபர் கிரைம் போலீசாரின் விசாரணைக்கு அனுப்பி உள்ளோம் என்றும், அந்த வீடியோ தயாரிப்பில் ஈடுபட்ட அனைவர் மீதும், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், ஆண்கள் மற்றும் பெண்கள் கூட, தங்களின் அனுமதி இல்லாமல், குறும்புத்தனமான வீடியோ வெளியிட்டுள்ளதாக, புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
மற்ற செய்திகள்