'நான் ஒருத்தன் தான் கத்திக்கிட்டே இருக்கேன்'... 'இது ஜப்பான்ல கூட இல்ல'... 'ஆனா இங்க என்னமோ நடக்குது'... சீமான் வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒரு மாதம் ஏன் அடைத்து வைக்க வேண்டும், எனச் சீமான் சரமாரி கேள்வியினை எழுப்பியுள்ளார்.

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை, திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரில் அமைந்துள்ள தனியார்ப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினைச் செலுத்தினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், பணநாயகம் இருக்கும்வரை ஜனநாயகம் என்பது கேலிக்கூத்துதான் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும் பேசிய சீமான், ''வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகும் சூழல் உள்ளது. அதனால்தான், அந்த முறையைக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதனைக் கண்டுபிடித்த நாடுகளே கைவிட்டுவிட்டன.

குறிப்பாக அதற்கு மைக்ரோசிப் கண்டுபிடித்த ஜப்பானே அதனைப் பயன்படுத்தவில்லை. நைஜீரியாவும், இந்தியாவும்தான் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றன. நீட் தேர்வு எழுதும்போது மூக்குத்தி, காதணிகளைக் கழற்றுகின்றனர். அதற்குள் 'பிட்'டை மறைத்து வைக்க முடியும் என நம்பச் சொல்கிறது அரசு. ஆனால், இந்த இயந்திரத்தில் ஒன்றும் செய்ய முடியாது என்கிறது. நாங்கள் வாக்குச்சீட்டு முறைக்கு வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மனிதக் கழிவுகளை மனிதனையே அள்ள வைத்துவிட்டு வாக்குகளை இயந்திரத்தில் பதிவு செய்யச் சொல்கின்றனர். அமெரிக்காவில் இது தலைகீழாக உள்ளது. கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது தேர்தல் ஆணையத்திற்குத் தெரியும். ஆனால்  தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காது. பத்தாண்டுகளுக்குத் தேர்தலில் நிற்கத் தடை எனப் பணம் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் பயம் வரும். ஆனால், சாலையில் செல்லும் சாமானியர்களையே தேர்தல் ஆணையம் பிடிக்கிறது.

மேலும் தேர்தலை ஒரே நாளில் நடத்திவிட்டு வாக்குகளை எண்ணுவதற்கு ஏன் இத்தனை நாட்கள் என்பது குறித்து யாரும் பேசுவது இல்லை. நான் ஒருவன்தான் கத்திக்கொண்டு இருக்கிறேன். நாட்டுக்கே 7 கட்டங்களாக நடத்திவிட்டு மேற்கு வங்கத்திற்கு 8 கட்டங்களாக ஏன் தேர்தல் நடத்த வேண்டும்? டிஜிட்டல் இந்தியா எனப் பேசுகிறீர்கள். அமெரிக்காவிலேயே ஒரு நாளில் வாக்குப்பதிவு முடித்து முடிவுகளைச் சொல்லிவிடுகின்றனர்.

எதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒரு மாதம் அடைத்து வைக்க வேண்டும்? தேர்தல் முடிந்தவுடன் ஊரடங்கு போடுவார்கள்? நாங்கள் அடங்கியிருப்போம். நீங்கள் அடங்கியிருப்பிர்களா? என்னமோ நடக்கிறது? நாங்களும் வேறு வழியில்லாமல் இந்தப் பாதையில் நடந்துகொண்டிருக்கிறோம்" எனச் சீமான் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்