‘நாங்க பேங்க்ல வேலை பாக்குறோம்’.. வீட்டுப் பெண்களிடம் வலை விரித்த ‘பலே’ தம்பதி.. வெளியான அதிர்ச்சி பின்னணி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பாதி விலைக்கு தங்கக்கட்டி விற்பதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் மாணிக்கம்-கயல்விழி தம்பதியினர். இவர்கள் அப்பகுதி மக்களிடம் வங்கியில் பணிபுரிவதாக கூறி வந்துள்ளனர். அதோடு சிங்கப்பூரில் இருந்து குறைந்து விலைக்கு தங்கக்கட்டி வாங்கி வந்த அதை பாதி விலைக்கு தருவதாகக் கூறி அப்பகுதி பெண்களிடம் சுமார் 3 கோடி ரூபாய் பணம் வசூல் செய்துள்ளனர்.

தங்களிடம் பணம் இல்லாதவர்கள் நகையாக கொடுக்கலாம் எனக் கூறி அடகுக்கடை வைத்திருந்த தங்களது கூட்டாளி அகில் என்பவரிடம் கொடுக்க சொல்லியுள்ளனர். இதை நம்பி பல பெண்கள் சுமார் 500 பவுன் நகைகள் வரை அகிலிடம் கொடுத்துள்ளனர். அதற்கு உத்தரவாதமாக பத்திரமும் எழுதிக் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் திடீரென ஒரு நாள் மாணிக்கம், கயல்விழி மற்றும் அகில் மதுரைக்கு தப்பியுள்ளனர். அங்கும் இதேபோல பலரை ஏமாற்றியுள்ளனர். மதுரையிலும் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸில் புகார் கொடுத்ததால், அங்கிருந்தும் தப்பிச் சென்றுள்ளனர்.

இதனை அடுத்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காரைக்குடி காவல் நிலையத்தில் இவர்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காரைக்குடி டிஎஸ்பி அருண் தலைமையிலான தனிப்படையினர் மூவரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் மாணிக்கம் மற்றும் அவரது மனைவி கயல்விழி கோவையில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை கைது செய்தனர். இதில் தலைமைறைவாக உள்ள அவர்களது கூட்டாளி அகிலை போலீசார் தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்