'போட்டோஷாப் பண்ண ஸ்கூல் போட்டோ'... 'VPN வச்சு சித்து விளையாட்டு'... 'போலீஸ் எல்லாம் சும்மா Bro என சவடால் விட்ட மதன் சிக்கியது எப்படி'?... சினிமாவை மிஞ்சிய பரபரப்பு சேசிங்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

போலீசார் சுற்றிவளைத்த நிலையில் அவர்கள் காலில் விழுந்து மதன் கதறி அழுதுள்ளார். அதோடு தன்னை மன்னித்துவிடுமாறு கூறியுள்ளார்.

ஆபாசமாகப் பேசி பப்ஜி விளையாட்டை ஒளிப்பரப்பி வந்த மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறைக்குப் புகார் வந்தது. பெண்கள் குறித்து ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் மதன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மதன் மீது ஆன்லைன் மூலமாக 159 புகார்கள் வந்துள்ளன.

விபிஎன் சர்வரை பயன்படுத்தும் மதன், தனது இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கமுடியாமல் செய்யும் நிலையில், பெருங்களத்தூர், சேலம் போன்ற பகுதிகளில் உள்ள பப்ஜி மதனின் வீட்டை சோதனை செய்து அவரது மனைவி கிருத்திகா, தந்தை மாணிக்கம் ஆகியோரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மதன் தொடங்கிய 3 யூடியூப் சேனலுக்கும் மனைவி கிருத்திகா அட்மினாக இருந்து வருவது தெரியவந்தது.

மதன் வெளியிட்ட பப்ஜி வீடியோக்கள் மூலம் கிடைத்த வருமானத்தில் 3 சொகுசு கார்கள், 2 பங்களாக்களை மதன் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. மதனுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி கைது செய்யப்பட்டு 30 ஆம்தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே கடந்த 2017 ம் ஆண்டு அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தில் அசைவ உணவகம் ஒன்றை மதன்குமார் நடத்தியுள்ளார்.

இதற்காக வங்கி மற்றும் நண்பர்களிடம் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். ஆனால் எதிர்பார்த்த அளவு உணவகத்தில் வருவாய் இல்லை. இதனால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்த மதன், கடைக்கு வாடகை கூட கட்ட முடியாமல் தவித்துள்ளார். இதைத் தொடர்ந்து வாடகை பாக்கி இருந்த போதே மதன் தலைமறைவாகியுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த வாடகை பாக்கி ரூ.2 லட்சம். அந்த கட்டடத்தின் உரிமையாளரான கஜபதி என்பவர், அம்பத்தூர் காவல்நிலையத்தில் அது தொடர்பாகப் புகார் அளித்து, அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

அதன் பிறகு தான், மதன் தீவிரமாக பப்ஜி விளையாட்டில் இறங்கி பணம் பார்க்கத்துவங்கியுள்ளார். தனது உருவத்தை வெளியிட்டால் தன்னை தேடும் கடன்காரர்கள் மற்றும் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்பதற்காகத் தான், தன்னை அடையாளம் தெரியாத நபராகக் கடைசி வரை காட்டிக்கொள்ள முயன்றிருக்கிறார். கடைசியில் அது தான் தனது தொழிலுக்கும் பாதுகாப்பு என கருதி, அதைத் தனது அடையாளமாகவும் மாற்றிக்கொண்டார் என்கிற விவரமும் போலீசாருக்கு தெரிய வந்தது.

இதற்கிடையே மதனைக் கைது செய்வதில் மத்திய குற்ற பிரிவு போலீசார் மும்முரமாக இருந்தனர். மதன் தனக்குத் தெரிந்த தொழில்நுட்பத்தை வைத்து போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த நிலையில், தன்னை யாராலும் நெருங்கக் கூட முடியாது என்ற திமிரோடு இருந்துள்ளார். 3 சிம் கார்டுகளை மதன் பயன்படுத்தி வந்த நிலையில், போலீசாருக்கு ஒரு ரகசியத் தகவல் வந்தது.

அதில் மதன் தர்மபுரியில் உள்ள வீடு ஒன்றில் பதுங்கி இருப்பதாகத் தெரியவந்தது. இதையடுத்து குறிப்பிட்ட வீட்டிற்குச் சென்ற போலீசார் ரகசியமாக அந்த வீட்டைக் கண்காணித்தனர். அந்த வீடு மதனின் உறவுக்காரர் ஒருவரின் வீடு என்பது தெரிய வந்தது. மேலும் அந்த உறவினரின் எண்ணைக் கண்காணித்த போலீசார் அவர் யாரிடம் எல்லாம் பேசுகிறார் என்பதையும் கண்காணித்து வந்தனர்.

இதையடுத்து மதன் அந்த வீட்டில் தான் இருக்கிறார் என்பதை உறுதி செய்த போலீசார், அதிரடியாக அந்த வீட்டிற்குள் நுழைந்து மதனைக் கைது செய்தனர். போலீசார் வந்ததைச் சற்றும் எதிர்பாராத மதன் அதிர்ச்சியில் உறைந்து  போனார். பின்னர் போலீசார் காலில் விழுந்து கதறி அழுத மதன், தான் செய்தது தவறு தான் என்றும், தன் மீதான குற்றங்களை ஏற்றுக்கொள்வதாகவும், தன்னை மன்னித்துவிடுமாறு கூறியுள்ளார்.

மதனைக் கைது செய்த நேரத்தில் அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன், ஆப்பிள் ஐபாட், போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இன்று மாலைக்குள் மதன் சென்னைக்கு அழைத்து வரப்பட வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே மதனின் சொகுசு கார்களை பறிமுதல் செய்த போலீசார் அவற்றைச் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நிறுத்தி வைத்துள்ளார்கள். முன்னதாக மதனின் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில் 4 கோடி ரூபாய் பணம் இருப்பதையும் போலீசார் கண்டறிந்துள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்