'மனதை சுக்கு நூறாக்கிய ஹேம்நாத் சொன்ன அந்த வார்த்தை'... 'துரு துரு சித்ரா கோர முடிவை தேட இதுதான் காரணமா'?... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சின்னதிரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

சின்னதிரை நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி பூந்தமல்லி அருகே உள்ள நட்சத்திர ஓட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சித்ராவின் தொடர்பிலிருந்த பலரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். இதனிடையே சித்ராவுடன் தங்கியிருந்த அவரது கணவர் ஹேம்நாத்திடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள்.

ஹேம்நாத்திடம் தொடர்ந்து 6 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவர் முன்னுக்குப் பின் முரணான சில தகவல்களைத் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியானது. இதையடுத்து சித்ராவுக்குச் சொந்தமான மற்றும் ஹேம்நாத்திடம் கைப்பற்றப்பட்ட செல்போனில் பதிவான தகவல்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அதிலிருந்த பல தகவல்கள் அழிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனால் போலீசார் சைபர் கிரைம் பிரிவு போலீசாரின் உதவியை நாடினார்கள். இதில் பல்வேறு தகவல்கள் வெளியானது. சித்ராவைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கணவர் ஹேம்நாத்தை நேற்று இரவு 11 மணியளவில் போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி சிறையில் அடைத்தனர். அவரிடம் போலீசார் பல மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். 

அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதில், ''சித்ரா-ஹேம்நாத் இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டார்கள். கொரோனா காரணமாகக் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், அதன்பின்னர் திருமண வரவேற்பை நடத்த சித்ரா திட்டமிட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் எப்போதும் துரு துருவென அனைவரிடமும் சகஜமாகப் பேசும் சித்ரா மீது ஹேம்நாத் தனது சந்தேகப்பார்வையை திருப்பியுள்ளார்.

நீ எந்த நடிகருடன் நெருக்கமாக இருந்தாய், என்ன ஆட்டம் எல்லாம் போட்டாய் என்பது எல்லாம் எனக்குத் தெரியும் என நாக்கில் நரம்பில்லாமல் ஹேம்நாத் பேசியுள்ளார். சில நேரங்களில் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே சென்று பிரச்சனையும் செய்துள்ளார். சித்ரா இறப்பதற்கு முன்பு அவர் நடித்த நாடகத்தில் சக நடிகருடன் நெருக்கமான காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தது. இதனை வைத்தும் சித்ராவிடம் ஹேம்நாத் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார்.

இதெல்லாம் சித்ராவை மிகுந்த மன உளைச்சலில் தள்ளியுள்ளது. இந்தச்சூழ்நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து ஹோட்டல் அறைக்கு சித்ரா வரும் போது அவரோடு வந்த ஹேம்நாத் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஹோட்டல் அறைக்கு இருவரும் வந்த நிலையில், ''நீ உயிரோடு இருப்பதை விட, செத்துப்போவதே மேல், செத்து போ'' என ஹேம்நாத் கடுமையாகப் பேசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இந்த ஒரு வார்த்தை தான் சித்ராவின் மனத்தை சுக்குநூறாக உடைத்துள்ளது.

இதன்பின்னர் தான் சித்ரா தற்கொலை என்ற கோர முடிவை எடுத்ததாகத் தெரிய வந்துள்ளது. அதன்பின்னர் சித்ரா தனது தாயுடன் இறுதியாகப் பேசியுள்ளார்'' என போலீசார் கூறியுள்ளார்கள். இதனிடையே கொரோனா நேரத்தில் சித்ரா நிதி நெருக்கடியில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு பக்கம் நிதி நெருக்கடி, மறுபக்கம் ஹேம்நாத்திடம் இருந்து வந்த நெருக்கடி என மிகுந்த மன நெருக்கடிக்கு சித்ரா ஆளாகியுள்ளார்.

கடுமையாக உழைத்து தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி சிறுக சிறுக சேர்த்த பணத்தில், சித்ரா திருவான்மியூரில் புதிதாக வீடு கட்டி வரும் நிலையில், ஆடி கார் ஒன்றையும் வாங்கியுள்ளார். மேலும் திருமண வரவேற்பை ஆடம்பரமாக நடத்த திருவேற்காட்டில் உள்ள பிரபல மண்டபத்தை பதிவு செய்து வைத்திருந்திருக்கிறார்.

ஆனால் ஒரு கட்டத்தில் நடிப்பை நிறுத்த வேண்டும் என்றும் சித்ராவிடம் ஹேம்நாத் கூறியதாகத் தெரிகிறது. இது எல்லாம் மொத்தமாகச் சேர்ந்து அவரை கடுமையான மன உளைச்சலுக்குத் தள்ளியுள்ளது. நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ தனது விசாரணையை நேற்று தொடங்கினார். முதலில் சித்ராவின் தாய் விஜயா, தந்தை காமராஜ், சகோதரி சரஸ்வதி, சகோதரர் சரவணன் ஆகியோர் ஆஜராகி விவரங்களைத் தெரிவித்தனர்.

நேற்று மதியம் 12 மணிக்குத் தொடங்கிய விசாரணை மாலை 3 மணி வரை நடைபெற்றது. இதனிடையே ஹேம்நாத் மற்றும் அவரது பெற்றோரிடம் இன்று ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஹேம்நாத் கைது செய்யப்பட்டு இருப்பதால் அவரது பெற்றோரிடம் மட்டும் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ இன்று விசாரணை நடத்துகிறார்.

நடிகை சித்ரா தற்கொலையில் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், போலீசார் விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்