சர்ச்சையை கிளப்பிய ‘ராஜராஜ சோழன்’ விவகாரம்.. இயக்குநர் ‘பா. ரஞ்சித்’ மீதான வழக்கில் நீதிமன்றம் அதிரடி கருத்து..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பாக நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித், கடந்த 2019-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் தொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘கடந்த 2019 ஜூன் 5-ம் தேதி நீலப்புலிகள் அமைப்பின் சார்பாக நடந்த கூட்டத்தில் ராஜராஜ சோழனின் வரலாற்று உண்மைகள் சிலவற்றை குறிப்பிட்டேன். குறிப்பாக டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் “செந்தமிழ் நாட்டு சேரிகள்” எனும் புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளவை குறித்தும் பேசினேன்.

பல்வேறு வரலாற்று புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையே நான் குறிப்பிட்டேன். இந்த தகவலை வேறு பலரும் பேசி உள்ளனர். ஆனால் என்னுடைய பேச்சு மட்டும் சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. நான் உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. எனது கருத்து எந்த சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை. ஆகவே என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என பா. ரஞ்சித் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், ‘ஒருவர் தனது கருத்தை வெளியிடும் சுதந்திரம் இருக்கிறது’ என தெரிவித்தார். மேலும் பா.ரஞ்சித் மீதான வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய இடைக்கால தடை விதித்தும், இதுதொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதனை அடுத்து இந்த வழக்கின் இறுதி விசாரணையை ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்