'இதுதான் காரணமா'... 'ஹெச்.ராஜாவை பதவியை விட்டு விடுவித்தது ஏன்'?... பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஹெச்.ராஜா தேசிய செயலாளர் பதவியிலிருந்து விடுவித்தது பரபரப்புக்கு உள்ளான நிலையில், அதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைமை அறிவித்த தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஹெச். ராஜாவின் பெயர் இடம்பெறவில்லை. 2014ஆம் ஆண்டு முதல் ஹெச். ராஜா பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர்களில் ஒருவராக இருந்து வந்தார். இந்த சூழ்நிலையில் தேசிய செயலாளர் பதவிக்கான பட்டியலில் ராஜாவின் பெயர் இடம்பெறாமல் போனது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதிதாக அறிவிக்கப்பட்ட தேசிய நிர்வாகிகள் பட்டியலில் 12 பேர் தேசிய துணைத் தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். எட்டு பேர் தேசிய பொதுச் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தேசிய தலைவர் திரு. ஜே.பி. நட்டா தலைமையில் புதிதாகப் பொறுப்பேற்கும் தேசிய நிர்வாகிகள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்," என்று ராஜா தனது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் திருச்செந்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் ஹெச்.ராஜாவைத் தேசிய செயலாளர் பதவியிலிருந்து விடுவித்தது ஏன் என்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ''பொதுவாகப் பொறுப்புகள் வழங்கப்படும்போது ஒரு பொறுப்பாளருக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்படும். இன்னொரு பொறுப்பை மாற்றி கொடுப்பது என்பதெல்லாம் நிகழும். இந்த பொறுப்பு இல்லையென்றால் வேறுவிதமான பொறுப்புகள் கொடுக்க வாய்ப்புகள் இருக்கிறது'' என்று தெரிவித்தார்.

இதற்கிடையே ஹெச்.ராஜாவுக்கு புதிய பதவி வழங்கப்படலாம் என்ற செய்திகள் அடிபடும் நிலையில், பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்