'அந்த காச்சி போன கை தான் எங்களை படிக்க வச்சது'... 'சாதித்த கல் உடைக்கும் தொழிலாளியின் மகன்'... நெகிழ்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மருத்துவரும் படிக்க வேண்டும் என்பது பலருக்குக் கனவாக இருக்கும். அதே வேளையில் படிக்க வேண்டும் என்பதே பலரது தலைமுறை கனவாக இருக்கும். அந்த கனவை நினைவாக்கி இன்று மருத்துவம் படிக்கத் தேர்வாகியுள்ளார் கல் உடைக்கும் தொழிலாளியின் மகன் ஒருவர்.

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இடதுக்கீடு வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன்மூலம் மூலம் பேரணாம்பட்டு அருகே உள்ள கவுராப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மாணவன் குணசேகரன் என்பவர், எம்.பி.பி.எஸ்.படிப்புக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் 4-வது இடத்தை பெற்று மருத்துவ படிப்பிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாணவன் குணசேகரனின் தந்தை கல் உடைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது தாய் பழனியம்மாள். குணசேகரனின் குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருந்த நிலையிலும், அவரது தந்தை ராஜேந்திரன் கஷ்டப்பட்டு குணசேகரன் மற்றும் அவரது தம்பி தங்கையையும் படிக்க வைத்துள்ளார். ஆரம்பக் கல்வியை சிந்தகணவாய் கிராமத்தில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்த குணசேகரன், பின்னர் டி.டி. மேட்டூர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் படித்துள்ளார்.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 477 மதிப்பெண்களும், பிளஸ்-2 பொதுத் தேர்வில் 1200- க்கு 1,080 மதிப்பெண்களும் பெற்ற குணசேகரன், கடந்த 2018ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் 332 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால் அந்த வருடம் அவரால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறமுடியாமல் போனது. இருப்பினும் நம்பிக்கையை விடாமல் முயன்ற அவர், ராசிபுரத்தில் உள்ள நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து 562 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேருவதற்குப் பயிற்சிக் கட்டணம் செலுத்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். டாக்டர் பரந்தாமன் மற்றும் அவரது பள்ளி ஆசிரியர் விஸ்வநாதன், கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உதவி செய்ததை நெகிழ்ச்சியுடன் நினைத்துப் பார்த்த குணசேகரன், மருத்துவராகி கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்வதே தனது லட்சியம் எனக் கூறியுள்ளார்.

மருத்துவர் ஆக வேண்டும் என்பது என்னுடைய கனவு மட்டுமல்ல, கல் உடைத்து வந்த பணத்தில் குடும்பத்தை நடத்தி, அந்த கஷ்டத்திலும் எங்களைப் படிக்கவைத்த எனது தந்தையின் கனவு என குணசேகரன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்