“குடலே அழுகி போச்சு!”.. “ஆபரேஷன் தியேட்டர் முழுதும் துர்நாற்றம்!”.. 12 வயது சிறுவனை போராடி காத்த அரசு மருத்துவர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டிருந்த 12 வயது சிறுவனின் உடலிலிருந்த பிரச்சினைக்கு மிகவும் ரிஸ்க்கான முறையில் அறுவை சிகிச்சை அளித்து அரசு மருத்துவர்கள் அந்த சிறுவனுக்கு மறுபிறவி கொடுத்துள்ளனர். 20 நாளைக்கு முன்பு பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் வயிற்று வலிக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவக் குழுவினர் சிறுவனுக்கு வயிறு வீங்கி இருந்ததையும், இதயத் துடிப்பு அதிகமாக இருந்ததையும் கண்டறிந்தனர்.

மேலும் நீர்ச்சத்து குறைந்து மயங்கிய நிலையில் இருந்த அச்சிறுவனுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் ரத்த அழுத்தத்தை மருத்துவர்கள் சரி செய்துள்ளனர். தவிர வயிறு வீங்கி இருப்பதற்கான காரணத்தை கண்டறிய ஸ்கேன் எடுத்துப் பார்த்துள்ளனர். அப்போதுதான் சிறுவனின் குடலில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பெற்றோர் அதிர்ந்தனர். ஆனாலும் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய மருத்துவர்கள் அதில் இருக்கும் அத்தனை ரிஸ்க்கான விஷயங்களையும் பெற்றோர்களிடம் முன்னராகவே தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் சம்மதிக்கவே சிறுவனின் வயிற்றைக் கிழித்து, அறுவை சிகிச்சையை தொடங்கினர். அப்போது சுமார் 1 லிட்டர் அழுகிய ரத்தம் வெளியே வந்ததாகவும், சிறுவனின் உடலில் கிட்டத்தட்ட 100 செ.மீ அளவுக்கு குடல் அழுகி இருந்ததாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்த அழகிய உடலை வெட்டி ஒருபுறம் அப்புறப்படுத்த, ஆபரேஷன் தியேட்டர் முழுவதும் அந்த துர்நாற்றம் வீசியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து சிறுகுடலும் பெருங்குடலும் ஒன்றாக சேர்க்கும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. சிறுவனுக்கு ரத்த ஓட்டம் தடைபட்டு குடல் எழுதுவதற்கு காரணமாக இருந்ததாகவும் கூறிய மருத்துவர்கள் 5 நாட்கள் சிறுவனுக்கு உணவு எதுவும் கொடுக்காமல், 6-வது நாள் வயிற்றில் இருந்து கேஸ் வெளியேறிய பிறகு தண்ணீரையும் இளநீரையும் கொடுத்து, 9-ஆம் நாள் இட்லி சாதம் உள்ளிட்டவை கொடுக்கத் தொடங்கினர். இதனிடையே சிறுகுடல் 80% இல்லாததால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மிகச் சிரமம் ஏற்பட்டது. ஆனால் 11-ஆம் நாள் நடந்ததுதான் யாரும் எதிர்பாராதது. ஆம், சிறுவனுக்கு தையல் போட்ட தொப்புள் பகுதியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மலம் வர ஆரம்பித்தது. உள்ளே அடைத்து வைத்த குடலின் தையல் பிரிந்ததால் இப்படி வயிற்று வழியாக மலம் வெளியேறுவதை பார்த்து சிறுவனின் அம்மா கதறி உள்ளார்.

எனினும் அறுவை சிகிச்சை இல்லாமல் நரம்பு மூலம் சத்து மருந்து மற்றும் உணவில் உள்ள சத்துக்கள் கலந்த விசேஷ மருந்துகளை செலுத்தி தொப்புள் வழியாக வெளிவந்த மலம் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அடுத்த 25 நாட்கள் அரசு மருத்துவமனையிலேயே வைத்து சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் காரணமாக 1 ரூபாய் கூட செலவு இல்லாமல் முழுமையான பாதுகாப்பான அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிறுவன் உடல் தேறி பிழைத்துக் கொண்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது.‌

இதே அறுவை சிகிச்சையை மற்றும் இதே சிகிச்சை கவனிப்பை தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் எப்படியும் 12 லட்சம் ரூபாய் வரை செலவாகியிருக்கும் என்று கூறும் மருத்துவர்களை தங்கள் மகனைக் காப்பாற்றியதாக அந்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் நெகிழ்ந்துள்ளனர். ஆனால் மருத்துவர்களோ, தாங்கள் கடமையைத்தான் செய்ததாகவும், இப்படி தனியார் மருத்துவமனையால் கைவிடப்பட்ட எத்தனையோ பேர் அரசு மருத்துவர்களால் பிழைக்க வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றும், ஆனால் அரசு மருத்துவர்கள் இதை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை அவ்வளவுதான் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

THANJAVUR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்