'தமிழகம் பிரிக்கப்படுமா'?... 'பாராளுமன்றத்தில் முக்கிய அறிவிப்பு'... செக் வைத்த மத்திய அரசு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொங்கு மண்டலத்தைப் பிரித்துத் தனி மாநிலம் அமைக்கப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளிவந்தன.

தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தைப் பிரித்துத் தனி மாநிலம் அமைக்கப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியானது. இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொங்கு மண்டல பகுதிகளில் உள்ள ஒரு சில அமைப்புகளும் இதற்கு ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்தன.

ஆனால் இதற்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சிகள் அனைத்தும் இதற்குக் கண்டனம் தெரிவித்தன. ஆனாலும் ஆதரவு, எதிர்ப்பு கருத்துக்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தன. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பிலும் தெளிவான பதில்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. இதனால் மக்கள் மத்தியில் ஒரு குழப்பமான நிலை நிலவியது.

இந்தநிலையில் பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினை இன்று எதிரொலித்தது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரிவேந்தர், ராமலிங்கம் ஆகியோர் இது சம்பந்தமாக மக்களவையில் கேள்வி ஒன்றை எழுத்துப்பூர்வமாக எழுப்பினார்கள்.

இதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்தார். அதில், ‘‘தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கும் எந்த கோரிக்கையும் பரிசீலனையில் இல்லை’’ என்று கூறினார். மத்திய மந்திரியின் இந்த பதில் மூலம் மாநில பிரிவினை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்