நீட் விலக்கு மசோதா: தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி!. சொன்ன காரணம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார், ஆளுநர் ஆர்.என்.ரவி. மேலும், திருப்பி அனுப்பியதற்கான காரணங்களையும் தமிழக அரசுக்கு விளக்கியுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, கடந்த ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி  நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது. அதனடிப்படையில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழுஅமைக்கப்பட்டு, நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டது. இதனையடுத்து நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை அக்குழு சமர்ப்பித்தது.

தமிழகத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கவும், +2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவர் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது. அதனடிப்படையில்,  கடந்த செப்.13-ம் தேதி சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. பாஜக தவிர்த்து, மற்ற அனைத்துக் கட்சி எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகுதான், குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்ப முடியும். ஆனால், நீட் தேர்வு மசோதா ஆளுநர் மாளிகையிலேயே கிடப்பில் இருந்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவியை சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குமாறு வலியுறுத்தினார். நீட் விலக்கு மசோதா ஆளுநரின் பரிசீலனையில் இருந்தது. அதன் தொடர்ச்சியாக மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து குடியரசு தலைவருக்கு அனுப்ப  வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரிய தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். நீட் விலக்கு மசோதா உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக உள்ளது. மசோதாவை மறுபரிசீலனை செய்யவேண்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சரியான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தி உள்ளார்.

GOVERNOR RN RAVI, CM MK STALIN, NEET, NEET EXAM, BILL, TAMILNADU GOVT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்