‘தமிழகத்தில் பரவும் கருப்பு பூஞ்சை தொற்று’!.. சென்னையில் 5 பேர் பாதிப்பு.. இதன் ‘அறிகுறி’ என்ன..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களை கருப்பு பூஞ்சை (Black fungus) நோய் தாக்கி வருகிறது. இதில் கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்தகாண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோயால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று தற்போது தமிழகத்திலும் பரவி வருகிறது. இதில் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு கருப்பு பூஞ்சை தாக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பலர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கூறிய சுகாதார அதிகாரிகள், ‘இந்த கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக மியூகோர்மைகோசிஸ் (Mucormycosis) என்ற நோய் ஏற்படுகிறது. சுற்றுச்சுழலில் உள்ள பூஞ்சை மூலம், இந்த கருப்பு பூஞ்சை மனிதர்களுக்கு எளிதாக பரவுகிறது. வெட்டுக்காயம், தீக்காயம் வழியாக தோலில் நுழையும் இந்த பூஞ்சை, பின்னர் தோலின் மீதும் பரவுகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிகளவில் ஸ்டீராய்டு எடுத்துக் கொள்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ள கொரோனா நோயாளிகளை இந்த கருப்பு பூஞ்சை எளிதில் தாக்கும். கடுமையான தலைவலி, கண்களில் வீக்கம், கண்கள் சிவப்பாக மாறுதல், திடீரென பார்வை குறைபாடு ஏற்படுதல், சைனஸ் பிரச்சனை, மூக்கில் வலி, வாய் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கருப்பாக மாறுவது உள்ளிட்டவை இந்த நோய் தொற்றுக்கு அறிகுறிகளாக உள்ளன.

இந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிய தவறினால் கண் பார்வை குறைபாடு, வாய், மூக்கு, தொண்டை பகுதிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் தன்னிச்சையாக எடுத்துக்கொள்ள கூடாது’ என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்றல் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 57 வயதான வெல்டிங் பட்டறை உரிமையாளர் சௌந்தரராஜன் என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் இந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் கேரளாவில் கருப்பு பூஞ்சை பாதிக்கப்பட்ட அப்துல் காதர் (62) என்பவரின் இடது கண்ணை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளது. இந்த கருப்பு பூஞ்சை, கண்ணில் இருந்து மூளையை பாதிக்கக் கூடும் என்பதால் அவரது கண்ணை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்