நுட்பமான ஓவியங்களை வரைந்த 'பிரபல ஓவியர்' கொரோனா தொற்றினால் மரணம்...! - கலைஞர்கள் இரங்கல்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நுட்பமான மற்றும் நேர்த்தியான ஓவியங்களை படைக்கும் ஓவியக் கலைஞன் இளையராஜா கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைந்தார்.

கும்பகோணம் அருகேயுள்ள செம்பியவரம்பில் எனும் கிராமத்தை சேர்ந்த பிரபலமான ஓவியர் இளையராஜா.

இவர் சென்ற வாரம் தனது அக்கா மகளின் திருமணத்துக்காக கும்பகோணத்திற்கு சென்றுள்ளார். திருமண நிகழ்சிகளை முடித்துவிட்டு சில நாட்களுக்குப்பிறகு சென்னை திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு உடலில் ஜலதோஷம், காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவுகள் காணப்பட்ட நிலையில் நண்பர்களிடம் ஊரில் போய் குளத்தில் குளித்ததால் ஜலதோஷம் பிடித்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவர் மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டுள்ளார். அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இளையராஜாவும் சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கொரோனா தொற்றானது நுரையீரல் முழுவதும் பரவி நுரையீரலை முழுமையாக தாக்கியிருந்தது. இதனையடுத்து, நேற்று (06-06-2021) நள்ளிரவு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இளையராஜா மிக நுட்பமான, நேர்த்தியான ஓவியங்களை வரையும் அசாத்தியமான ஓவிய கலைஞர். இவருடைய பெண்கள் ஓவியங்கள் மிகவும் புகழ்பெற்றவை ஆகும். பிரபல வார இதழ்களில் வெளியாகும் சிறுகதைகளில் இவரது ஓவியம் இடம்பெறும். எழுத்தாளர்களின் கதையோடு இவரின் ஓவியமும் சேர்ந்து கதைக்கான முழுமையை வாசகரால் உணர முடியும்.

குறிப்பாக பெண்களை மிகவும் அழகாக தத்ரூபமாக வரைவதில் வல்லவர். இவரது ஓவியங்களை பார்க்கும் போது ஓவியமா அல்லது புகைப்படமா என்று சந்தேகப்பட கூடிய அளவுக்கு துல்லியமாக வரையும் திறமை கொண்டவர், அசாத்தியமான படைப்பாளி.

2003-ல் நடைபெற்ற முதல் ஓவியக் கண்காட்சியில் இருந்து மிகுந்த கவனம் பெற்று நிறைய ரசிகர்களை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலை, இலக்கிய உலகினை சேர்ந்த கலைஞர்கள் ஓவியர் இளைராஜாவின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்