'போக்குவரத்து செலவுக்காக... 100 சவரன் நகை கொள்ளை'!... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செய்த 'த்ரில்லர்' சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

போக்குவரத்து செலவுக்காக குடும்பத்துடன் வீடு புகுந்து கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி - பசுவந்தனை சாலை திருப்பதி காலனியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சொக்கலிங்கம். அவர், கடந்த டிசம்பர் 29ஆம் தேதி சென்னைக்குச் சென்றுவிட்டு ஜனவரி 3ஆம் தேதி ஊருக்குத் திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 100 சவரன் நகைகளைக் கொள்ளையடித்து தப்பியது தெரியவந்தது.

போலீஸில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அவற்றில், ஒரு காரில் வந்த மர்ம நபர்கள் மருத்துவரின் வீட்டுப் பூட்டை உடைக்கும் காட்சி பதிவாகியிருந்தது.

இதைத் தொடர்ந்து, காரின் எண்ணை அடிப்படையாக வைத்து போலீசார் கொள்ளையர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை கோவில்பட்டி - இனாம் மணியாச்சி சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுட்டிருந்தபோது போலீஸ்காரர்களைக் கண்டதும் ஒரு கார் வேகமாக அந்த இடத்தைக் கடக்க முயன்றுள்ளது.

காரை மடக்கிய போலீசார் அதில் இருந்தவர்களைப் பிடித்தனர். மேலும், காரின் பதிவு எண் டாக்டர் வீட்டில் திருடிய காரின் பதிவு எண்ணுடன் ஒத்திருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். காரில் இருந்த நான்கு பேரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 70 வயதான முகமது யூசுப் மற்றும் அவரது மகன்களான 31 வயதான முகைதீன், 29 வயதான சாதிக் பாட்ஷா, 23 வயதான ஷாஜகான் என்பது தெரியவந்தது.

தொழில்முறைக் கொள்ளையர்களான முகமது யூசுப்பும், அவரின் மகன்களும் சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி என பல மாவட்டங்களில் கைவரிசைகள் காட்டியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, பல்வேறு காவல் நிலையங்களில் இவர்கள் மீது வழக்குகள் உள்ள நிலையில் சமீபத்தில் முகமது யூசுப்புக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால் நெல்லைக்குச் சென்ற இந்த குடும்பத்தினர் அங்கு தனியார் மருத்துவமனையில் யூசுப்பை அனுமதித்து, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

சிகிச்சை முடிந்த நிலையில் மீண்டும் வீடு திரும்ப போதிய பணம் கையில் இல்லாததால் கொள்ளையில் இறங்க திட்டமிட்டுள்ளனர். அப்போதுதான் டாக்டர் சொக்கலிங்கம் வீட்டைக் குறிவைத்து 100 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்

கொள்ளையடித்த நகைகளை நெல்லையில் உள்ள உறவினர் மூலமாக உசேன் என்பவரிடம் விற்றதும் தெரியவந்தது. 100 சவரன் நகைகளையும் மீட்ட போலீசார் கொள்ளை வழக்கில் யூசுப் மற்றும் அவரது மூன்று மகன்கள், நகைகளை வாங்கி விற்ற இருவர் என மொத்தம் ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

The images used are only representational images and they do not reflect the actual incident.

ROBBERY, TIRUNELVELI, TUTICORIN, DOCTOR, FAMILY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்