'500 ரூபாய் குடுங்க' ... 'கொரோனாவ விரட்டிடலாம்' ... ராணிப்பேட்டையில் சிக்கிய 'போலி' டாக்டர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ராணிப்பேட்டை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றைக் குணப்படுத்துவதாக கூறிய போப்லி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் என்னும் பகுதியில் மாதவன் என்பவர் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது கிளினிக்கின் முன் தான் கையைப் பிடித்தே காய்ச்சலை குணமாக்குவதாக விளம்பர பலகை ஒன்றை வைத்துள்ளார். தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அனைவரையும் அச்சுறுத்தியுள்ளது. இதனால் சாதாரணமாக சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு தன்னிடம் வருபவர்களிடம் 'உங்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளது. இதனால் உங்கள் உயிருக்கு பிரச்சனை ஏற்படும்' என்று கூறி சாதாரண மாத்திரைகளை கொடுத்து தலா ஒருவருக்கு சுமார் 500 ரூபாய் வரை வாங்கியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலறிந்து போலீசார் மற்றும் மருத்துவ அதிகாரிகள் மாதவன் கிளினிக்கிற்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு நடத்திய சோதனையில் அதிக அளவிலான பாராசிட்டமால் மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதிக அளவிலான மாத்திரைகள் அவருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். மாதவனிடம் நடத்திய விசாரணையில் அவர் போலி டாக்டர் என்பதும் பிளஸ் 2 வரை மட்டுமே படித்துள்ளதும் தெரிய வந்தது.

மேலும், சில மருத்துவக் குறிப்புகளை மட்டுமே மனப்பாடம் செய்து மாதவன் கிளினிக் நடத்தி வந்த தகவலும் தெரிய வந்துள்ளது. மாதவனை கைது செய்த போலீசார் அவரது கிளினிக்கிற்கும் சீல் வைத்தனர். உலகம் முழுவதும் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரசிற்கு இன்னும் மருந்து கூட கண்டுபிடிக்காத நிலையில், அதற்கு சிகிச்சையளிப்பதாக கூறி போலி டாக்டர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டது ராணிப்பேட்டை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RANIPETTAI, TAMILNADU, CORONA VIRUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்