VIDEO: "பொம்பள புள்ளைங்கனா... அவ்ளோ கேவலம்!?.. புடவை கட்டிட்டு வந்தா"... பெண்கள் உச்சகட்ட ஆவேசம்!.. மேனேஜருக்கு மிளகாய் பொடி ட்ரீட்மெண்ட்!.. என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஈரோடு ஜே.ஜே கார்மெண்ட்ஸ் பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் பாலியல் தொல்லை கொடுத்து வந்த மேனேஜரை, தனிமையில் அழைத்துச்சென்று பெப்பர் ஸ்பிரே அடித்து கட்டிப்போட்டு மிளகாய் பொடியை தூவி, சரமாரியாக தாக்கிய மதுரை பெண்களின் வீடியோ வெளியாகி உள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் ஜே.ஜே மில்ஸ் மற்றும் கார்மெண்ட்ஸ் என்ற பனியன் நிறுவனம் இயங்கி வருகின்றது.

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனமான இங்கு அவினாசி அடுத்த சூளையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். வெளியூரை சேர்ந்த ஏராளமான பெண் ஊழியர்கள் இங்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

சம்பவத்தன்று மேலாளர் சிவக்குமார், கார்மெண்ட்ஸின் கணினி ஊழியரான மதுரையை சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் மற்றும் அவரது தோழி ஆகியோருடன் பல்லடம் அடுத்த பச்சான்காட்டுப்பாளையம் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு வைத்து இரு பெண்களும் சேர்ந்து மேலாளர் சிவக்குமார் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து, அவர் நிலைகுலைந்த நேரத்தில் உதைத்து கைகால்களை கட்டிபோட்டு மிளகாய் பொடிதூவியதோடு காவல்துறை கட்டுப்பாட்டறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர், மிளகாய் பொடி ட்ரீட் மெண்டால் நிலைகுலைந்த மேனேஜர் சிவக்குமாரையும், தாக்குதல் நடத்திய இரு பெண்களையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், சிவக்குமார் குறித்து திடுக்கிடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கார்மென்ட்ஸில் வேலைப்பார்க்கும் தனக்கு பிடித்த பெண்களிடம் செல்போன் நம்பரை வாங்கிக் வைத்துக் கொள்ளும் மேலாளர் சிவக்குமார், அவர்களை சேலை அணிந்து வரச்சொல்லி வாரந்தோறும் முறைவைத்து வெளியிடங்களுக்கு அழைத்துச்சென்று பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவது வழக்கம் என்றும், தனக்கு ஒத்துழைக்க மறுக்கும் பெண்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பி விடுவார் என்பதால் சில பெண்கள் தங்கள் குடும்ப வறுமையை நினைத்து சிவக்குமாரின் மிரட்டலுக்கு அஞ்சி பாலியல் சீண்டல்களை வெளியில் சொல்ல இயலாமல் தவித்ததாக தெரிவித்துள்ளார்.

அதே போல தனக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததால், சிவக்குமார் இனி எந்த பெண்ணிடமும் தவறாக நடக்கக் கூடாது என்று எச்சரிக்கும் விதமாக அவர் தனிமையில் இருக்க அழைத்துச்சென்ற இடத்தில் வைத்து மிளகாய் பொடி தூவி கட்டிபோட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக கூறியுள்ளார். மேலும், இந்த சம்பவத்தின் போது எடுத்த வீடியோ ஒன்றையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

ஆனால், உதைவாங்கிய சிவக்குமாரோ, தான் அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தன்னை கடத்தி வந்து தாக்கியதாக தனது வழக்கறிஞரை வைத்து போலீசாரிடம் பக்குவமாக பேசி உள்ளார்.

இதையடுத்து போலீசார், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டால், தங்களிடம் புகார் செய்யாமல் நீங்களே எப்படி நேரடியாக தாக்குதல் நடத்தலாம் என்று இரு பெண்களின் மீதும், சிவக்குமாரை அடித்து உதைத்ததாக வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகின்றது.

அதே நேரத்தில் இரு பெண்களும் அளித்த புகாரின் பேரில் சிவக்குமார் மீதும் சாதாரண அடிதடி வழக்கு ஒன்றை பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தற்போது, ஜாமீனில் வெளியே வந்துள்ள அப்பெண், மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து, பல்லடம் காவல்துறையினர் பாலியல் தொல்லை கொடுத்த சிவகுமாருக்கு ஆதரவாக தங்களை மிரட்டி முதல் தகவல் அறிக்கையில் கையெழுத்து பெற்றதாக புகார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பாலியல் தொல்லை கொடுத்த மேலாளரை தாக்கிய பெண்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு மறு விசாரணை நடத்தப்படும் என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்