'ஒரு விவசாயி படுற கஷ்டம் இன்னொரு விவசாயிக்கு தான் புரியும்...' 'ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தது அவங்க தான்...' - தமிழக முதல்வர் சூறாவளி பரப்புரை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நான் விவசாயி என்பதால் விவசாயிகளின் கஷ்டங்களை அறிந்தவன் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.அருண்மொழித்தேவனை ஆதரித்து வெள்ளிக்கிழமை புவனகிரியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார், அப்போது,

அதிமுக கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி என்று மக்கள் விழிப்புடன் தெளிவாக உள்ளார்கள். ஸ்டாலின் தற்போது திமுகதான் காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டதாக பேசி வருகிறார். காவிரி நீரை பெற்றுதந்தது நான்தான். ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வந்த போது திடீரென துரதிர்ஷ்டவசமாக இறந்து விட்டார்.

                                   

அதன்பின்னர் முதல்வராக வந்த நான் அந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தி 50 ஆண்டு காலமாக தீர்வு காணப்படாமல் இருந்த அந்த வழக்கிற்கு தீர்வு காணப்பட்டது.

காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு கண்ட அரசு அதிமுக அரசு. நடுவர் மன்ற தீர்ப்பு வந்தவுடன் மத்திய அரசிதழில் ஏன் வெளியிடவில்லை. 2007லேயே தீர்ப்பு வந்துவிட்டது. அதிலிருந்து 10 ஆண்டு காலம் ஜெயலலிதா போராடி உச்சநீதிமன்றம் சென்று நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வைத்தார்.

                                                

கருணாநிதி ஆட்சியிலிருந்தபோது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி. கருணாநிதி முதல்வர், அவரது மகன் துணை முதல்வர், அவரது மருமகன் மத்திய அமைச்சர். அப்போது மக்களுக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டு வரவில்லை. விவசாயிகளின் ஜீவாதார உரிமையைப் பெற்று தந்த அரசு அதிமுக அரசு.

                                 

ஜெயலலிதா இறந்து விட்டார். அதிமுக கட்சி உடைந்துவிடும், தான் முதல்வராகவிடலாம் என ஸ்டாலின் எண்ணியிருந்தார். ஆனால் இந்த விவசாயி முதல்வராக வருவார் என அவருக்குத் தெரியவில்லை. ஆண்டவனாய்ப் பார்த்து மக்கள் ஆசியுடன்  முதல்வராக பதவி ஏற்றுள்ளேன். ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தது திமுக. விவசாயிகள் பாதிக்கப்படுவர் என தெரிந்து கையெழுத்திட்டனர். மக்கள் எதிர்ப்பு வந்தவுடன் திமுகவே போராட்டம் நடத்துகிறது. விவசாயிகளை ஏமாற்ற முடியாது.

                                    

டெல்டா மாவட்ட விவசாயிகள் அனைவரும் என்னை சந்தித்து ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். நான் சட்ட வல்லுநர்களை கலந்து பேசி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தேன். ஏனென்றால் நான் விவசாயி என்பதால் விவசாயிகளின் கஷ்டங்களை அறிந்தவன். புவனகிரி தொகுதியில் கடல் உப்புநீர் உட்புகாத வகையில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான ஆயத்தப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

                                     

விரைவில் கீழ்புவனகிரியில் தடுப்பணை கட்டப்படும். புவனகிரி, கம்மாபுரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டிக் கொடுக்கப்படும். திருமுட்டம்- காவனூர்  வெள்ளாற்றின் இடையே உயர்மட்ட பாலம் கட்டி கொடுக்கப்படும். புவனகிரி தாலுகாவிற்கு கருவூலம் அமைத்துத் தரப்படும் என தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்