'கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்'...'நண்பர்களின் கண் முன்பே'...என்ஜினீயரிங் மாணவருக்கு நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரையில் இருந்து கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட்ட வந்த மாணவர், நண்பர்களின் கண்முன்பே கடலில் மூழ்கி இறந்த சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அனஞ்சியூர் தமிழ்நகரை சேர்ந்தவர் உதயக்குமார். இவருடைய மகன் சியாம். மதுரையில் உள்ள தியாகராஜர் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அவருடன் படித்து வரும் நண்பர்கள் சுபாஷ் மற்றும் யோகேஷ். இதனிடையே தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் அதனை கொண்டாட நண்பர்கள் மூன்று பேரும் முடிவு செய்தார்கள்.

இதையடுத்து எங்கு செல்லலாம் என யோசித்தபோது, புதுச்சேரிக்கு சுற்றுலா செல்லலாம் என மூன்று பேரும் முடிவு செய்து, நேற்று முன்தினம் இரவு மதுரையில் இருந்து புதுச்சேரிக்கு வந்தனர். அதிகாலை புதுச்சேரிக்கு வந்த அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்தனர். பின்னர் பகல் 2 மணி அளவில் 3 பேரும் சின்ன வீராம்பட்டினம் கடற்கரை பகுதிக்கு வந்தனர்.

அங்கு அவர்கள் கடலில் இறங்கி ஜாலியாக குளித்தனர். அப்போது அவர்களுக்கு அருகில்  சுற்றுலா வந்த மற்ற பயணிகள் சிலரும் குளித்து கொண்டு இருந்தார்கள். இதனிடையே நேற்று கடல் அலைகள் வழக்கத்தைவிட அதிக சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென எழுந்த ராட்சத அலை மாணவர்கள் 3 பேரையும் வாரிச்சுருட்டி கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனை சற்றும் எதிர்பாராத மாணவர்கள், உதவி கேட்டு கூச்சல் போட்டனர்.

அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் மாணவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இந்நிலையில் மாணவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட, கடற்கரையில் பயணிகள் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாவலர்கள் 2 பேர் உடனடியாக கடலுக்குள் குதித்து அலையில் சிக்கி தத்தளித்த 3 மாணவர்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து 3 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக புதுச்சேர அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் மாணவர் சியாம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மாணவர்கள் சுபாஷ் மற்றும் யோகேஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். சுற்றுலாவிற்காக வந்த நண்பன் தங்களின் கண் முன்பே இறந்ததை அறிந்த மாணவர்கள் இருவரும் மருத்துவமனையில் வைத்து கதறி அழுதனர்.

இதற்கிடையே கல்லூரி மாணவர் சியாம் இறந்தது குறித்து, மதுரையில் உள்ள அவருடைய பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்த பிறகு மாணவனின் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

ACCIDENT, COLLEGESTUDENTS, PONDICHERRY BEACH, ENGINEERING STUDENT, RESCUED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்