'முதல்வரின் காருக்குள் பறந்து வந்த கடிதம்'... 'அதிர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள்'... 'கடிதத்தில் அப்படி என்ன இருந்தது'?... வியாபாரிக்கு முதல்வரின் சர்ப்ரைஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முதல்வரின் வாகன அணிவகுப்பு மிகுந்த பாதுகாப்போடு செல்லும். அதில் ஒவ்வொரு நொடியையும் அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். அப்படி இருக்க முதல்வரின் காருக்குள் பழ வியாபாரி ஒருவர் கடிதம் ஒன்றைத் தூக்கிப் போட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 2 மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் திருவாரூரில் நடந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு காரில் நீடாமங்கலம் வழியாகத் தஞ்சை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். முதல்வரின் வாகன அணிவகுப்பு நீடாமங்கலம் அண்ணாசிலை அருகே வந்தபோது, அங்கு அதிமுக சார்பில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலர் முதல்வரிடம் கோரிக்கை மனுக்களைக் கொடுக்க முயற்சித்தார்கள்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த திருவாரூர் மாவட்டம் இடையர்எம்பேத்தி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தான் கொண்டு வந்த கடிதத்தை கொடுக்க முயன்றார். ஆனால் முதலமைச்சரிடம் அதைக் கொடுக்க முடியவில்லை. இதையடுத்து கடிதம் முதல்வரிடம் சேர வேண்டும் என்பதற்காக முதலமைச்சரின் காருக்குள் கடிதத்தை செல்வராஜ் வீசி உள்ளார். இதைப் பார்த்து அதிர்ந்துபோன முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள், செல்வராஜிடம் காருக்குள் என்ன வீசுகிறாய்? என கேட்டு சற்று கடினமாக நடந்து கொண்டார்கள். பின்னர் முதல்வரின் வாகன அணிவகுப்பு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

இதற்கிடையே காரில் செல்லும் போது செல்வராஜ் காருக்குள் வீசிய கடிதத்தை முதல்வர் படித்துள்ளார். இதையடுத்து செல்வராஜை, தஞ்சைக்கு அழைத்து வருமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி பழ வியாபாரி செல்வராஜை நீடாமங்கலம் போலீசார் தஞ்சைக்கு அழைத்துச் சென்றார்கள். தஞ்சையில் முதல்வரைச் சந்திக்கச் சென்ற செல்வராஜைப் பரிவுடன் விசாரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடிதத்தைக் கையில் தான் கொடுக்க வேண்டும், இப்படி வீசக் கூடாது என அறிவுறுத்தினார்.

பின்னர் செல்வராஜைப் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்க உத்தரவிட முதல்வர், செல்வராஜுக்கு பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தார். காருக்குள் கடித்ததை வீசியதால் முதல்வர் சத்தம் போடுவாரா எனப் பயந்த செல்வராஜுக்கு முதல்வர் அன்பாகப் பேசி, பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்ததை அவரால் நம்பவே முடியவில்லை. இன்ப அதிர்ச்சியிலிருந்த அவர் தான் அந்த கடிதத்தில் என்ன எழுதி இருந்தேன் என்பது குறித்து விளக்கினார்.

அந்த கடிதத்தில், ''திருச்செந்தூரில் ஆட்சிபுரியும் தமிழ்க்கடவுளான முருகனுக்குப் பல பெயர்கள் உண்டு. அவருக்கு பழனிசாமி என்ற பெயரும் உண்டு. அவர் பெயரை தங்களுக்கு வைத்ததால் தான் தமிழக ஆட்சி பீடத்தில் அமர்ந்து முதலமைச்சர் ஆனீர்கள். மீண்டும் 5 ஆண்டு தமிழக ஆட்சி பீடத்தில் அமர்வீர்கள். இது சத்தியம்'' என எழுதி இருந்ததாகக் கூறினார்.

காருக்குள் கடிதத்தை வீசிய செல்வராஜை முதல்வர் அழைத்துப் பேசியதோடு அவரிடம் பரிவுடன் நடந்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்