'10 கோடி நஷ்ட ஈடு.. மன்னிப்பு கேட்கணும்'.. விகடன் மீது துர்கா ஸ்டாலின் அதிரடி வழக்கு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விகடன் குழுமத்தில் ஒன்றான ஜூனியர் விகடன் இதழில் எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மீது அவதூறாக குற்றம் சாட்டி செய்திகளை வெளியிட்டதாகக் கூறி, அந்நிறுவனத்தின் மீது நஷ்ட ஈடு கேட்டும், மன்னிப்புக் கோர வேண்டும் என்கிற நிபந்தனையை வலியுறுத்தியும் துர்கா ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 

4 நாட்களுக்கு முன்னர் அதாவது கடந்த 2019, ஜூலை 24-ஆம் தேதி ஜூனியர் விகடன் இதழில் திமுகவில் துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சபரீசன் உள்ளிட்டோர் மீது அவதூறான கருத்துக்களுடன் கூடிய, திராவிட முன்னேற்ற கம்பெனி என்கிற தலைப்பில், மிஸ்டர் கழுகு என்கிற கட்டுரை வெளியானது.

அதில், மறைமுகமாக துர்கா ஸ்டாலின் திமுகவை இயக்குவதாக கூறப்படுவதாகவும், உதயநிதியின் தினசரி அரசியல் நிகழ்வுகள் குறித்து, அன்பில் மகேஷ் உள்ளிட்டோருக்கு உத்தரவு தருவதே துர்கா ஸ்டாலின்தான் என்று சொல்லப்படுவதாகவும், மருமகன் சபரீசன், கட்சியின் அனைத்து மட்டங்களையும் கண்காணிக்கும் வேலையைச் செய்துவருகிறார் என்று சொல்லப்படுவதாகவும், மொத்தத்தில் துர்கா ஸ்டாலின், சபரீசன், உதயநிதி மூவர் எடுக்கும் முடிவுகள்தான் இப்போது கட்சி எடுக்கும் முடிவு என்பதைப்போல மாறியிருக்கிறது என்று கட்சியினர் பலரும் புலம்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், விகடனின் இந்த கட்டுரையில், ‘கழகம் என்பது கிட்டத்தட்ட கம்பெனியாகவே மாற்றப்பட்டுவிட்டது. துர்கா ஸ்டாலின்-கம்பெனி டைரக்டர், சபரீசன் - கம்பெனி சி.இ.ஓ (சீஃப் எக்ஸிக்யூட்டிவ் ஆபீஸர்) உதயநிதி - கம்பெனியின் எம்.டி (மேனேஜிங் டைரக்டர்) என்றே செயல்படுகிறார்கள்’ என்று கட்சியின் மூத்த பெரியவர் ஒருவர் கூறுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ள துர்கா ஸ்டாலின் தொடர்ந்துள்ள வழக்குக்கான வக்கீல் நோட்டீஸில், தரவுகளின் அடிப்படை உண்மைத் தன்மைகளை ஆய்வு செய்யாமல் எழுதியது, அவதூறு பரப்பியது, அவதூறு கருத்தினை வைத்து விநியோகம் செய்தது உள்ளிட்டவற்றுக்கு எதிரான வழக்குப் பிரிவுகளான 499, 500, 501, மற்றும் 502  ஆகியவற்றின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதோடு, 48 மணி நேரத்துக்குள், பொது நல அறக்கட்டளைக்காக 10 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

DMK, DURGASTALIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்