"நெஞ்சுல நேர்மையும், செயல்ல நியாயமும் இருந்தா போதும்"... நீங்களும் 'சி.பி.ஐ.' ஆகலாம்... விளம்பரத்தை பார்த்து ஏமாந்துடாதிங்க மக்களே...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சி.பி.ஐ.யில் பயிற்சி அளித்து வேலை தருவதாக இணையதளங்கள் வாயிலாக விளம்பரங்கள் வெளியிட்டு மோசடியில் ஈடுபடுவோரை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை சி.பி.ஐ. எச்சரித்துள்ளது.

சட்டம், சைபர், குற்றவியல், மேலாண்மை, பொருளாதாரம், வணிகவியல், தடய அறிவியல் உள்ளிட்ட பாடங்களை படித்த பட்டதாரிகளுக்கு இன்டர்ன்ஷிப் ஒன்றை அறிவித்து சி.பி.ஐ. நடத்தி வருகிறது.  இதைப் பயன்படுத்தி, சி.பி.ஐ. பயிற்சி அளித்து, வேலையும் தருவதாக இணையதளங்களில் விளம்பரங்கள் வெளியிட்டு சிலர் மோசடியில் ஈடுபடுவதாக சி.பி.ஐ.யின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த மோசடி குறித்து எச்சரிக்கும் விதத்தில் சி.பி.ஐ. தரப்பில் அதன் இணையதளத்தில் விளக்கம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

அதில்,  தங்களது பயிற்சி திட்டத்தை சிலர் இணையதளங்களில் குறிப்பிட்டு, இதை சி.பி.ஐ.யின் வேலை வாய்ப்பு என கூறி  பணம் கறக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும், அதுபோன்ற கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த பயிற்சி முடிந்தவுடன்  சிபிஐ வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தவறான தகவல் பரப்பப் படுவதாகவும், பயிற்சியின் போதே ஊதியமும் வழங்கப்படும் என்று கூறப்படுவதை நம்ப வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

6 முதல் 8 வாரங்களுக்கு சி.பி.ஐ. அளிக்கிற இந்த பயிற்சிக்கு எந்த விதமான ஊதியமும் தரப்பட மாட்டாது. பயிற்சி பெற விரும்புபவர்கள் பயிற்சி காலத்தில் தங்குவதற்கு, பயண செலவுகளுக்கு சொந்தமாகத்தான் ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என்றும் சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற போலி இணையதளங்களை கையாளும் எவரையும் அல்லது நிறுவனங்களையும், யாரேனும் நாடினால், அது அவர்களது சொந்த பொறுப்புதான். இதன்மூலம், அவர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏற்படும் எந்த ஒரு இழப்புக்கும், பாதிப்புக்கும் சி.பி.ஐ. பொறுப்பு ஏற்காது என்றும் தெரிவித்துள்ளது.

CBI, ADVERTISERS, FOOLED, CBI WARNING, CYBER CRIME

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்