கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் 28 நாள் ‘இதை’ தொடவேகூடாது.. அமைச்சர் விஜயபாஸ்கர் முக்கிய தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் இருந்து திருச்சி மண்டலத்திற்கு இன்று அதிகாலை வந்தடைந்த கொரோனா தடுப்பூசி மருந்துகளை, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதனை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திந்தார். அப்போது பேசிய அவர், ‘இந்தியாவில் வரும் 16-ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்க உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் அதேநேரத்தில் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கிவைக்கிறார்.

முதற்கட்டமாக தமிழகத்திற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 டோஸ் நேற்று சென்னை வந்தடைந்தன. உடனடியாக அவை மண்டல அலுவலகங்களுக்கு குளிர்பதன முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை பொறுத்தமட்டில் முதல் தடுப்பூசி போட்ட 28-வது நாள் இரண்டாவது தடுப்பூசி (டோஸ்) போடவேண்டும். 2ம் இரண்டாம் தடுப்பூசி போட்ட 14-வது நாள்தான் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். முதல் தடுப்பூசி போடப்பட்டதில் இருந்து 48 நாட்கள் கழித்து நோய் எதிர்ப்பு சக்தி வரும் என்று ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் தடுப்பூசி போட்டவர்கள் 2-வது டோஸ் போடும் வரையில், 28 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது.

இந்த தடுப்பூசியால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. எனவே தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம். இந்த தடுப்பூசி மூலம் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேவைப்பட்டால் முன் மாதிரியாக, அனுமதி பெற்று நானும் தடுப்பூசி போட தயாராக இருக்கிறேன்’ என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்