‘போதிய பேருந்துகள் இயக்காததால், கொந்தளித்த பயணிகள்.. தடியடி நடத்திய காவல்துறையை கண்டிக்கிறேன்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொதுமக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளார் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு சென்னை மாவட்ட செயலாள்ருமான  ஜெ. அன்பழகன்.

நேற்றிரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்லும் பேருந்துகளில் ஏறியமர்ந்த பெண்கள், குழந்தைகள், யுவதிகள், முதியவர்கள் என பலரும் பேருந்துகள் மாலை 6 மணியில் இருந்து நகராமல், 5 மணி நேரத்துக்கும் மேலாக நின்றுகொண்டே இருந்ததால் நெருக்கடியில் தவித்துள்ளனர். கிண்டி உள்ளிட்ட முனையங்களில் இருந்து பேருந்துகளை புக் செய்தவர்கள் பலருக்கும் அவரவர் பயணம் செய்ய வேண்டிய பேருந்துகள் கோயம்பேட்டை விட்டே நகராமல் இருந்துள்ளதாக கூகுள் மேப்பில் காட்டியதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தவிர, இரவு 10 மணி அளவில், கோயம்பேட்டில் இரு விபத்துக்களும், தொடர்ந்து உருவான கைகலப்பு மற்றும் சிறு அளவிலான கல்வீச்சு, கலவரங்களும் நிகழ்ந்ததால் போலீஸார் லேசான தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்து பேருந்துகளை நகர்த்தத் தொடங்கினர். கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கானோர் ஆங்காங்கே நின்றபடியும், பேருந்துகள் கிடைக்காமல் காத்திருக்கவும், பேருந்துகளை முற்றுகையிட்டு ஏறவும் செய்யும் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வலம் வந்தன.

இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேர்தலை முன்னிட்டு தங்கள் ஊருக்கு சென்று வாக்குகள் செலுத்த கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று இரவு முதல் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். அரசின் சார்பில் முன்னெச்சரிக்கையாக அதிக பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆக, போதிய பேருந்துகள் இயக்காத அரசை எதிர்த்து குடிமகனாக குரல் எழுப்பியவர்கள் மீது தடியடி நடத்தியது ஜனநாயக நாட்டில் கண்டனத்திற்குரியது. தமிழக காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

LOKSABHAELECTIONS2019, BUS, JANBAZHAGAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்