‘2 குழந்தைகள் பலி; 16 பேருக்கு அறிகுறி..’ 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரவும் கொடிய நோய்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

டிப்தீரியா எனப்படும் தொண்டை அடைப்பான் நோய்க்கு ஈரோடு மாவட்டத்தில் இரண்டு சிறுவர்கள் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாகக் கருதப்பட்ட டிப்தீரியா எனப்படும் தொண்டை அடைப்பான் நோய் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இந்த நோய் குறிப்பாக 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத்தான் பெரும்பாலும் தாக்கும் என்பதே இதில் கொடுமையான விஷயம். தொண்டையில் சவ்வு போன்று உருவாகி, மூச்சு விடவும், சாப்பிடவும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்காவிட்டால் மிகவும் சிரமம் எனக் கூறப்படுகிறது. 

கடந்த ஜூன் 15ஆம் தேதி ஈரோடு உருளிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த மாதப்பன் (10) என்னும் சிறுவனுக்கு தொண்டை வலி ஏற்பட்டுள்ளது. சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் பரிசோதித்துப் பார்த்தபோது அவருக்கு டிப்தீரியா அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து  கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட மாதப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேபோல துர்க்கம் மலைக்கிராமத்தைச் சேர்ந்த காசி பிரசாத் (10) என்ற சிறுவனும் டிப்தீரியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சுமார் 16 குழந்தைகளுக்கு டிப்தீரியா நோய் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சவுண்டம்மாள், “மாதப்பன் எனும் சிறுவன் உயிரிழந்த போதே அவர்களுடைய கிராமத்தைச் சுற்றி 5 கி.மீ பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். காசி பிரசாத் உயிரிழந்ததை அடுத்து துர்க்கத்திலேயே ஒரு மருத்துவக்குழு தங்கியிருந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு கண்காணித்து வருகின்றனர். சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள 21 கிராமங்களுக்கு மருத்துவக்குழுக்களை அனுப்பி குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போட்டு வருகிறோம். இந்த நோய் மேலும் பரவாமலிருக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.

புகைப்படம் : விகடன்

DIPHTHERIA

மற்ற செய்திகள்